

தமிழகத்தில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீடு மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. அரசு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, டிஜிட்டல் முறையில் 33 கேள்விகள் கொண்ட தகவல்களை சேகரிப்பார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதுமக்கள் இணையம் வழியாக தங்களின் விவரங்களை ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை தாங்களாகவே பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு (Self Enumeration) ஆன்லைனில் இன்று தொடங்கியது.
வரும் 2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை தமிழகத்தில் நடத்த உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாடு இயக்குனர் சுந்தரேஷ் பாபு செய்தியாளர்களிடம் பேசியபோது 'இந்த கணக்கெடுப்பில் மாநில அரசின் பொதுத்துறை வருவாய்த்துறை நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் , நகராட்சி மாநகராட்சி ஆணையர் முதல் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் சுமார் 1.6 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் பங்கேற்பதாகவும், வீடு வீடாக வந்து விவரங்களை சேகரிக்கும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாநில சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் வலுவான கொள்கை உருவாக்கவும் திட்டமிடங்களுக்கும் இந்த துல்லியமான தரவு சேகரிப்பு மிக முக்கியமானது' எனவும் கேட்டுக் கொண்டுள்ளார் .
கணக்கெடுப்பில் 33 கேள்விகள் கேட்கப்படும் எனவும் அதில் வீடுகளின் நிலை ,குடிநீர், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள் ,கழிப்பிட வசதி, கணினி போன்ற வசதிகள் வீட்டின் உரிமை (வாடகை வீடா அல்லது சொந்த வீடா) , குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ,வாகனங்கள், கைப்பேசி உள்ளிட்ட பல விபரங்கள் கேட்கப்படுகிறது.
தரவுகளின் துல்லிய தன்மையை உறுதி செய்வதற்காக காகித பதிவேடுகளுக்கு பதிலாக நிகழ்வு நேர தரவுகளை சேகரிக்க பிரத்தியேக கைப்பேசி செயலிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் விபரங்களை அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகவும் தாங்களே பதிவு செய்வதற்கான சுய கணக்கெடுப்பு வசதி பதினாறு மொழிகளில் தரப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை அதாவது இன்று ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை 15 நாட்கள் இந்த இணைய பதிவு செய்வதற்கான அனுமதி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கணக்கெடுப்பாளர் 200 முதல் 250 வீடுகளுக்கோ அல்லது 800 முதல் 900 மக்கள் தொகை உள்ள பகுதிக்கு பொறுப்பாளராக இருப்பார் தமிழகம் முழுவதும் 126 மக்கள் தொகை பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வீட்டு கணக்கிடுதல் மூலம் இரண்டாம் கட்டத்தில் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத்தில் மக்கள் தொகை கணக்கீடு எளிமையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2027 பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தகுதி, தொழில், இடம்பெயர்வு, சாதிவாரி விவரங்கள் உள்ளிட்ட சமூக-பொருளாதாரத் தரவுகள் சேகரிக்கப்படும்.
ஆன்லைன் சுய கணக்கெடுப்புக்கான (Online Self Enumeration) வழிமுறைகள்:
1.இணையதளத்திற்குச் செல்லுதல்:
முதலில் se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று, உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்து, திரையில் தோன்றும் பாதுகாப்புக் குறியீட்டை (Captcha) உள்ளிட வேண்டும்.
2.குடும்பத் தலைவர் மற்றும் கைப்பேசி எண் பதிவு:
முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உள்ளிட்ட பின், குடும்பத் தலைவரின் பெயரைப் பதிவிட வேண்டும் (யாரை வேண்டுமானாலும் குடும்பத் தலைவராக பதிவு செய்யலாம்; ஆனால் ஒருமுறை பதிவிட்டால் மாற்ற இயலாது). பின்னர், குடும்பத்திற்கு ஒரு கைப்பேசி எண்ணை மட்டும் பதிவிட்டு, அதற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும்.
3.இருப்பிடத்தைத் துல்லியமாகக் குறித்தல்:
முகவரி பகுதியில் மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண் (Pincode), கிராமம்/நகரம் ஆகியவற்றை உள்ளிட்ட பின் 'தேடுக' (Search) என்பதை அழுத்தவும். திரையில் தோன்றும் இணைய வரைபடத்தில் (Map), சிவப்பு நிறக் குறியீட்டை (Red Marker) நகர்த்தி, வீட்டின் துல்லியமான இருப்பிடத்தை பொருத்தி 'சேமித்து தொடர்க' (Save & Continue) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4.33 கேள்விகளுக்குப் பதிலளித்தல்:
இருப்பிடத்தை சேமித்தவுடன் வீட்டின் கட்டமைப்பு, குடிநீர், கழிப்பறை சுகாதாரம், சொத்துக்கள் சார்ந்த 33 முக்கிய கேள்விகள் அடங்கிய படிவம் தோன்றும். விபரங்களைப் பூர்த்தி செய்து பதிவை நிறைவு செய்ததும், திரையில் 11 இலக்க சுய பதிவேட்டு அடையாள எண் (SE ID) தோன்றும். அதனை பத்திரமாக சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் பதிவை முடித்து 'SE ID' பெற்றவர்கள், ஆகஸ்ட் மாதம் களப்பணியாளர்கள் வீட்டிற்கு வரும்போது அந்த 11 இலக்க எண்ணை காண்பித்தால் போதுமானது. அவர்கள் மீண்டும் 33 கேள்விகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. இணைய வசதி இல்லாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் நேரடியாக வரும் பணியாளர்களிடம் விவரங்களை அளிக்கலாம்.
பொதுமக்கள் அளிக்கும் தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும், கைப்பேசி எண் கணக்கெடுப்பு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் இயக்குநர் சுந்தரேஷ் பாபு உறுதியளித்துள்ளார்.
துல்லியமான தகவல்களை இணையதளத்தில் இன்று முதலே பதிவு செய்து, இந்த தேசிய கடமையில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்!