
தற்போது நம் நாட்டில் உணவுகளை ஆன்லைனில் ஆர்டம் செய்து வாங்குவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஸ்விக்கி (Swiggy)மற்றும் சொமேட்டோ (Zomato) என்பது ஒரு ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமாகும். அவசர உலகில் வீட்டிலிருந்தபடியே உணவுகளை பெரும் விதமாக ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் உணவு விநியோகம் செய்து வருகிறது. ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கும், வெளியூர்களில் வேலை செய்பவர்களுக்கும், சமைக்கத் தெரியாதவர்களுக்கும் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோவும் கண்கண்ட கடவுள் என்றே சொல்லலாம். ஏனெனில் நம் ஆர்டர் செய்த உணவை சில மணிநேரங்களிலேயே எந்த நேரத்திலும், எந்த இடத்திற்கும் சென்று இவர்கள் உணவை டெலிவரி செய்வார்கள்.
வீட்டில் இருந்தே ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ நிறுவனங்களின் ஆப் மூலமாக நமக்கு விருப்பமான உணவகங்களில் நமக்கு தேவையான உணவுகளை புக் செய்தால் அவைகளை வீடுகளுக்கே உடனடி விநியோகம் செய்வார்கள்.
இந்த நிலையில் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் தற்போது கமிஷன் தொகையை அதிகளவில் உயர்த்தி உள்ளதால், பொதுமக்களுக்கு அவர்களது உணவுப் பொருள்கள் சென்று கிடைக்கும் பொழுது 40 சதவீதம் வரை அதன் விலை அதிகரித்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆன்லைன் உணவு விநியோகம் மற்றும் க்விக் காமர்ஸ் நிறுவனங்களான பிளிங்கட் (Blinkit), ஜெப்டோ (Zepto) போன்ற டெலிவரி சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி வரி வரும் செப்டம்பர் 22-ம்தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் நிலையில், இதன் விளைவாக, தற்போது நீங்கள் ஒரு உணவை ஆர்டர் செய்யும்போது மொத்தத் தொகையில், இந்த இரு கட்டணங்களும் (உணவுக்கான கட்டணம், டெலிவரி கட்டணம்) சேர்ந்து வசூலிக்கப்பட உள்ளதால், அது நுகர்வோரின் தலையில்தான் கூடுதல் சுமை விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு உணவை ஆர்டர் செய்யும்போது, உணவுக்கான கட்டணத்திற்கு (Restaurant Services)ஏற்கெனவே 5% ஜிஎஸ்டி உள்ள நிலையில், தற்போது ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய அறிவிப்பின்படி, டெலிவரி கட்டணத்திற்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.
இதன் விளைவாக ஒரு உணவுக்கு 5% ஜிஎஸ்டி + டெலிவரி கட்டணத்துக்கு 18% ஜிஎஸ்டி என இரட்டை வரி இனி நமது பில்லில் இருக்கும். இதனால் நீங்கள் உணவுடன் சேர்த்து வரிக்கு அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாகவே, டெலிவரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கும், ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களுக்கும் இடையே சட்டரீதியான சிக்கல்கள் இருந்து வந்தன. இதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி டெலிவரி கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் பிரியாணி சாப்பிட ஆசை வரும்போது அதனுடன் சேர்த்து, ‘டெலிவரி கட்டணமும் விலை அதிகமாகும்’ என்பதை ஒரு நிமிடம் நினைவில் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் அருகில் இருக்கும் கடைக்கு நடந்தே சென்று பிரியாணி வாங்கி வரலாம் அல்லது அங்கேயே சாப்பிடலாம். இது பணத்தையும், நேரத்தையும், ஆரோக்கியத்தையும் ஒரு சேர மிச்சப்படுத்தும். டெலிவரி கட்டணத்திற்கு ஆகும் செலவை பிரியாணிக்கு சைடிஷ் வாங்கி சாப்பிடலாம்.
ஆனால், இந்த வரி விதிப்பு அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஏனெனில், அங்கு டெலிவரி என்பது பொருளுக்கான சேவையின் ஒரு பகுதி, தனிப்பட்ட சேவையல்ல.