200 யூனிட் இலவசம்...கரண்ட் பில் பெரியளவில் குறையாதது ஏன்? காரணம் இது தான்..!

electricity bills
electricity bills
Updated on

கடந்த 2016ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த நடைமுறை மாறாமல் முக ஸ்டாலின் முதல்வராக இருந்த போதும் தொடர்ந்தது.

நடந்து முடிந்த தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்று தவெக வெற்றி பெற்று விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கான திட்டத்தில் கையெழுத்திட்டார்.

இந்த நடைமுறை கடந்த (மே) 10-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வீடுகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்றும், பூஜ்ஜிய மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அடுத்த மாதம் கரண்ட் பில்லில் 200 யூனிட் குறைக்கப்படுமா? - மின்வாரியம் சொல்வது என்ன?
electricity bills

அந்த வகையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மே 10 முதல் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், 100 யூனிட்கள் வரையிலான இலவச மின்சாரப்பலனைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 210 யூனிட்டுக்கு ரூ.282 வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 210 யூனிட்டுக்கு 47 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2.46 கோடி வீட்டு மின் நுகர்வோரில், 67 லட்சம் நுகர்வோர் இரு மாதங்களுக்கு ஒருமுறை 100 யூனிட்டுகளுக்கும் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்கள் தற்போது எவ்விதக் கட்டணமும் செலுத்துவதில்லை. இலவச மின்சார வரம்பு 200 யூனிட்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லாத குடும்பங்களின் எண்ணிக்கை 1.2 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 85.83 லட்சம் நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தில் ரூ.235 குறைவாகச் செலுத்துவர். TNPDCL தரவுகளின்படி, 500 யூனிட்டுகளுக்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் 34.24 லட்சம் நுகர்வோர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகை மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும். விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த இலவச மின்சாரத் திட்டம், குறிப்பாகக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களின் வீட்டுச் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய நலத்திட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே வீடுதோறும் eb reading கணக்கிடும் பணி தொடங்கி நிலையில் மே மாத பில்லில் சிலருக்கு அதிக தொகை வந்ததால் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பெரிய விவாதம் எழுந்தது.

உதாரணமாக, 224 யூனிட் பயன்படுத்திய ஒருவருக்கு ரூ.112 தான் பில் வர வேண்டும், ஆனால் ரூ.302 வந்ததாக அந்த நபர் மின்வாரியத்தை குறிப்பிட்டு கருத்து பதிவு செய்தது சர்ச்சைக்கு காரணமானது. இதையடுத்து புதிய மின்சார மானிய திட்டத்தின் நடைமுறை எப்படி கணக்கிடப்படுகிறது என்ற குழப்பம் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.

அதாவது அறிவிக்கப்பட்ட 200 யூனிட் இலவசம் நடைமுறையில் சிலருக்கு எதிர்பார்த்த அளவுக்கு குறைந்த மின்சார கட்டணம் வரவில்லை. குறிப்பாக 500 யூனிட்டிற்குக் கீழ் பயன்படுத்தியவர்களுக்கும் கூட அதிக தொகை கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்ததால், சலுகை ஏன் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. இதற்கு காரணம், தமிழ்நாட்டில் மின்சார பில் 2 மாதங்களுக்கு ஒருமுறை (60 நாட்கள்) கணக்கிடப்படுவது தான்.

இலவச திட்டம் மே 10-ல் தான் தொடங்கியது என்பதால், மே மாதத்தில் கரெண்ட் பில் எடுத்தவர்களுக்கு முழு 60 நாட்களும் புதிய சலுகை கிடைக்கவில்லை. அதாவது இலவச திட்டம் தொடங்குவதற்கு முன்பு இருந்த நாட்களுக்கு பழைய முறைப்படியும், திட்டம் தொடங்கிய பின்பு இருந்த நாட்களுக்கு புதிய முறைப்படியும் பில் கணக்கிடப்பட்டுள்ளதால் (Pro-rata Basis) இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மின்சார வாரியமும் தெளிவான விளக்கம் அளிக்காத காரணத்தால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்த 224 யூனிட் பயன்படுத்திய நபருக்கு மே 21-ல் பில் எடுக்கப்பட்டது. அதாவது, அவரது 60 நாட்களில் 48 நாட்கள் பழைய திட்டத்திலும், 12 நாட்கள் மட்டும் புதிய திட்டத்திலும் இருந்தால் அவருக்கு முழுமையாக 200 யூனிட் இலவசம் கிடைக்கவில்லை.

வழக்கமாக கிடைக்கும் 100 யூனிட் இலவசத்துடன், புதிய திட்டத்தின் 12 நாட்களுக்காக மட்டும் சுமார் 20 யூனிட் கூடுதலாக இலவசம் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 120 யூனிட் மட்டுமே இலவசமாக கிடைத்தது. அதனால், 224 யூனிட்டில் இருந்து மீதமுள்ள 104 யூனிட்டுகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டது. இந்த 104 யூனிட்டுகளும் ஒரே விலையில் கணக்கிடப்படவில்லை.

120 முதல் 200 யூனிட் வரையிலான 80 யூனிட்டுகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.2.35 வீதம் கணக்கிட்டு சுமார் ரூ.188 வந்தது. அதன்பிறகு, 200 முதல் 224 வரை உள்ள 24 யூனிட்டுகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.4.70 வீதம் கணக்கிட்டு ரூ.112.80 சேர்க்கப்பட்டது. இந்த இரண்டு தொகை மற்றும் பிற கட்டணங்களும் சேர்ந்து மொத்த பில் சுமார் ரூ.302 ஆக வந்ததாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மக்களுக்கு குட் நியூஸ்..! ரூ.282 கரெண்ட் பில் கட்டியவர்களுக்கு இனி வெறும் ரூ.47 தான்..!
electricity bills

பொதுமக்களுக்கு அடுத்த பில்லில் இருந்து முழுமையான 200 யூனிட் இலவச சலுகை கிடைக்கும் என்றும் மின்வாரியம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com