

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 இடங்களைப் பிடித்து பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) தேவையான இடங்களைவிட குறைவாகப் பெற்றுள்ளது.
ஆனால் 2006-ல் கலைஞர் 96 சீட்டுகள் (சுமார்) வைத்துக்கொண்டு முதலமைச்சராக முடிந்தது, அப்போது நிலவிய தனித்துவமான அரசியல் சூழலால் மட்டுமே அது நடந்தது. விஜய் முதல்வர் ஆவதற்கு தற்போதைய அரசியல் சூழலில் பிற கட்சிகளின் ஆதரவு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், விஜய் முதல்வர் ஆவதற்கான வாய்ப்புகள் மற்றும் சூழல்கள் குறித்து பரவலான விவாதங்கள் சமூக ஊடகங்களில் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து விரிவாக அலசலாம் வாங்க..
தமிழக அரசியல் வரலாற்றில் 'மைனாரிட்டி அரசு' என்ற சொல் 2006-2011 காலகட்டத்தில் மிகவும் பிரபலமானது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, தனிப்பெரும்பான்மை இல்லாமலேயே ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்தது.
அதாவது 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும் கட்சியாக 96 இடங்களைப் பெற்றது. இது பெரும்பான்மைக்கு (118) குறைவாக இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் பாமக ஆதரவுடன் திமுக சிறுபான்மை ஆட்சியை அமைத்தது. இந்த அரசு 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
அதாவது 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கு 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக 96 இடங்களை வென்றதன் மூலம், ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்தி, 82 வயதான கலைஞர் கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
அந்த தேர்தலில் திமுக கூட்டணி (காங்கிரஸ், பாமக, சிபிஎம் உள்ளிட்டவை) 163 இடங்களை வென்றது; திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு 96 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 34 இடங்களும் பா.ம.கவுக்கு 18 இடங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்தன. மொத்தமாக 163 இடங்கள் அந்தக் கூட்டணிக்குக் கிடைத்திருந்தன.
அந்த தேர்தலில் திமுக 96 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற போதும் கலைஞர் முதலமைச்சராக முடிந்தது. ஏனென்றால் அவர் கூட்டணி வைத்த காங்கிரஸ், பாமக உடன் சேர்ந்து கூடடணி வைத்து ஆட்சி அமைத்தார். அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார்கள். அதன் காரணமான அவரது ஆட்சி எந்த தொல்லையும் இல்லாமல் 5 ஆண்டுகள் நீடித்தது.
அதுமட்டுமின்றி அன்றைய மைனாரிட்டி அரசு கவிழாமல் இருந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம், கவர்ச்சிகரமான மக்கள் நலத்திட்டங்களான, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், இலவச TVகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவை மக்களிடையே அமோக ஆதரவை பெற்றது என்று சொன்னால் மிகையாகாது.
பெரும்பான்மை கிடைக்காதபோது சிறுபான்மை அரசை அமைப்பதில் சிக்கல் கிடையாது. ஆனால் அதில் எப்போது சிக்கல் வரும் என்றால் எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து உங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், அதாவது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும்பட்சத்தில் அப்போது ஆட்சி கவிழும். உங்களை ஆதரிப்பவர்கள் இருந்தால் பிரச்சனை இல்லை. உதவி கேட்டு பெறுவதில் எதுவும் சங்கடம் இல்லை. அதற்காக மறுபடியும் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமில்லை என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மைனாரிட்டி அரசுகள் என்பது புதியதல்ல என்றாலும், தற்போதைய சூழல் மிகவும் சிக்கலானதாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தற்போது தவெக (TVK) அதேபோன்றதொரு சூழலை தான் எதிர்கொண்டு வருகிறது.
அன்றைய காலகட்டத்தில் ஆட்சியைத் தள்ளிவிடுவது என்பது கூட்டணிக் கட்சிகளுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், முரண்பாடுகள் இருந்தாலும் ஆதரவை தொடர்ந்தனர்.
2006-ல் திமுகவுடன் இருந்தது போன்ற ஒரு வலுவான கூட்டணிக் கட்டமைப்பு தற்போது தவெக-விடம் இல்லாத நிலையில், திமுக மற்றும் அதிமுக-வின் நகர்வுகளைப் பொறுத்தே இந்த அரசின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.