

பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல், கரும்பு, புத்தாடையுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தமிழர்களின் மற்றொரு அடையாளமான ஜல்லிக்கட்டு. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும். இதற்கு அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் உலக அளவில் சிறப்பு பெற்றவை.
அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினமான இன்று (15-ந் தேதி) அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் கோலாகலமாக போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த 3 இடங்களிலும் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு நடந்தது.
அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு 3,090 காளைகளும், 1,849 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில், பல்வேறு கட்ட சோதனைக்கு பின்பு அவனியாபுரத்தில் விளையாட தகுதி வாய்ந்த 1100 காளைகளும், சுமார் 600 வீரர்களுக்கும் அனுமதி கிடைத்தது.
இந்தாண்டு முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் புள்ளியை கணக்கிட டிஜிட்டல் (எல்.இ.டி.) ஸ்கோர் போர்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புள்ளிகள் விவரம் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் 12 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்தாண்டுக்கான முதல் ஜல்லிட்டு போட்டி அவனியாபுரத்தில் நேற்று தொடங்கியது முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் இறுதிச்சுற்றோடு சேர்த்து 12 சுற்றுகள் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு காளையர்கள் அடக்கினர். அதேசமயம் காளையர்களுக்கு ஈடு கொடுக்காமல் சுற்றி சுற்றி விளையாடிய மாடுகளை கண்டு பார்வையாளர்கள் உற்சாக முழக்கமிட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, டிவி, கட்டில், சைக்கிள், மிக்ஸி, பிரோ, பித்தனை பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாடு பிடி வீரர்கள் 27 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 21 பேர், பார்வையாளர்கள் 9 பேர் என மொத்தம் 57 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 9 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் இருந்தே காளைகளை அடக்கிய வீரர்கள் ஒவ்வொரு சுற்றின் முடிவின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இறுதி சுற்றின் முடிவில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளத்தை சேர்ந்த பாலமுருகன் முதல் பரிசை தட்டிச்சென்றார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 2-வது இடத்தையும், 16 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் 3-வது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு டூவீலர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். ஆனால், அவர்களை எல்லாம் விருமாண்டி சகோதரர்களின் காளையான கருப்பன் தனித்து நின்று ஆட்டம் காட்டியது. வெகு நேரம் போட்டியாளர்களை மிரள வைத்ததால் இந்த காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.
அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு முடிவடைந்த நிலையில், இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. நாளை பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.