கடந்த 2024ம் ஆண்டு இண்டிகோ விமானங்களுக்கு மட்டும் மொத்தமாக 216 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக செய்திகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் என்பது தொடர்க்கதையாகி வந்தது. இதனையடுத்து விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து இ-மெயில் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ மிரட்டல் வந்தது. இதனால், விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர். இதனையடுத்து மிரட்டல் வந்தவுடன் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், எந்த மர்ம பொருள்களும் வெடிகுண்டுகளும் கிடைக்காமல் அந்த மிரட்டல்கள் வெறும் புரளி ஆகிவிடுகின்றன. இதனால், எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. இதனால், விமானம் தாமதமாக புறப்படுவது போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.
இதனால் மிரட்டல் விடுபவர்கள் மேல் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டது. அப்பட்டியிருந்தும் கூட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துக்கொண்டே இருந்தன.
விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் முரளிதர், “2024-ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இதில், 714 மிரட்டல்கள் உள்ளூர் விமானங்களுக்கு வந்துள்ளன. அதிகபட்சமாக இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இண்டிகோ விமானங்களுக்கு அதிகமுறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மோசமான விமானங்கள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு 54 நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகளின் கருத்தைப் பெற்று இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியானது. மொத்தம் 109 விமான நிறுவனங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.