
சமீப காலமாக செஸ் போட்களில் தமிழக வீரர்கள் சாதனை மேல் சாதனை புரிந்து வருகின்றனர். விஸ்வநாதன் ஆனந்த், கொனேரு ஹம்பி, குகேஷ், பிரக்ஞானந்தா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் இளம் வீரர்கள் செஸ் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் 87-வது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் நடந்தது. இதில் 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 12-வது சுற்று முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான சென்னையை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா தலா 8½ புள்ளிகளுடன் முதலிடம் வகித்தனர்.
இதன் 13-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் குகேஷ் அர்ஜூன் எரிகைசியிடம் தோல்வியை சந்தித்தார். அதே போல் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கீமரிடம் வீழ்ந்தார். இதனால் கடைசி சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் புள்ளிகள் கணக்கில் சமநிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் சமநிலையில் இருப்பதால் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க ‘டைபிரேக்கர்’ முறை கடைபிடிக்கப்பட்டது.
காயை விரைவாக நகர்த்தும் ‘பிளிட்ஸ்’ முறையிலான இந்த ஆட்டத்தில் மோதிய குகேஷ் - பிரக்ஞானந்தா இடையிலான போட்டி மிகவும் கடுமையாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற போட்டி மனப்பான்மையில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு விளையாடினர். இவர்களின் விளையாட்டை பார்த்த பார்வையாளர்கள் இடையே யார் வெற்றி பெறுவார் என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது. உனக்கு நான் சளைத்தவர் அல்ல என்பதற்க்கிணக்க இருவரும் விட்டுக்கொடுக்காமல் கடுமையாக போராடினர். இதில் முதல் ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், அடுத்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட பிரக்ஞானந்தா வெற்றியை தனதாக்கி சமநிலையை உருவாக்கினார்.
இதனால் டைபிரேக்க சுற்று நடத்த முடிவு செய்யப்பட்டது. டைபிரேக்கரில் சுற்றின் ஆரம்பத்திலேயே குகேஷ், பிரக்ஞானந்தா இடையே போட்டி கடுமையாக இருந்தது. கடைசியில் குகேஷை வெற்றி பெற விடாமல் சாமர்த்தியமாக காய்களை நகர்த்திய பிரக்ஞானந்தா இறுதியில் குகேசை வீழ்த்தி வெற்றிக்கனியை பறித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தார்.
தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா இந்த வெற்றியின் மூலம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இளம் வயதில் பட்டம் வென்றவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார் பிரக்ஞானந்தா. தோல்வி அடைவோம் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்காத இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் போட்டி முடிந்தும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியால் மிகவும் சோகத்துடன் காணப்பட்டார்.
வெற்றிக்கு பிறகு பிரக்ஞானந்தா கூறுகையில், ‘சந்தோஷமாக இருக்கிறது என்றும், இந்த மகிழ்ச்சியை எப்படி வெளிபடுத்துவது என்று எனக்கு தெரியவில்லை என்றார். மேலும் நான் உண்மையிலேயே வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை’ என்றார்.
இளம் வயதில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் பிரக்ஞானந்தாவுக்கு, முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், அதானி குழும தலைவர் கவுதம் அதானி உள்பட பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சமீப காலமாக இந்தியா விளையாட்டு போட்டிகளில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் சாதனைகளை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
U19 மகளிர் T20 உலகக் கோப்பை மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் வெற்றியை தொடர்ந்து தற்போது செஸ் சாம்பியன் போட்டியில் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா என இந்தியாவில் வெற்றி பயணம் தொடந்து கொண்டே இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.