
கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் விதிக்கப்பட்ட மரண தண்டனை, பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கடைசிக் கட்ட முயற்சியாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் முக்கிய சன்னி முஸ்லீம் தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் தலையிட்ட நிலையில் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). இவர் ஏமன் நாட்டில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் செவிலியராக வேலையில் இருந்தார். இதற்காக கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் அங்கு தங்கி இருந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நிமிஷாவின் கணவர் மற்றும் குழந்தை இந்தியா திரும்பினர். நிமிஷா பிரியா நாடு திரும்பும் நேரத்தில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், அவரால் நாடு திரும்ப முடியவில்லை.
அவர் ஏமனில் தங்கி இருந்தபோது அந்த நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஆஸ்பத்திரி ஒன்று தொடங்க திட்டமிட்டதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் மஹ்தியை கொலை செய்ததாக கடந்த 2017-ம் ஆண்டு நிமிஷா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். ஆனாலும் நிமிஷாவின் மரண தண்டனையை அந்த நாட்டு கோர்ட்டு உறுதி செய்தது.
அந்த தீர்ப்பில் நாளை (ஜூலை 16-ந் தேதி) தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது கணவர் டோமி தாமஸ், அவரது குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் எடுத்த எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் செவிலியர் நிமிஷாவை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி, நர்ஸ் நிமிஷாவை விடுவிப்பது தொடர்பாக அரசு இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிமிஷாவை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை என்றும் அவர் கூறினார்.
அந்நாட்டுச் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இரத்தப் பணத்தை வாங்கிக்கொண்டு மன்னித்தால் நிமிஷா பிரியா தப்பிக்கலாம். இரத்த பணம் என்பது குற்றம் சாட்டப்பட்ட நபரின் விடுதலைக்கு ஈடாக இறந்த நபரின் உறவினர்கள்/குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதாகும். இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக, மஹ்தி குடும்பத்தாருக்கு ரூ.8.60 கோடி இரத்தப் பணத்தைக் கொடுக்க நிமிஷா பிரியா குடும்பத்தார் முன்வந்தனர்.
இதற்கிடையே இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் முக்கிய சன்னி முஸ்லீம் தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டார். பாதிக்கப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரத்தப் பணத்தை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கொடுக்கும்படி அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
அங்குள்ள பிரபல சூஃபி தலைவர் ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ் தலைமையில் இன்று ஏமனில் உள்ள தம்மரில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் உமர் பின் ஹபீஸின் பிரதிநிதிகள் மஹ்தியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் பாதிக்கப்பட்டவரின் சார்பாக பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்று வந்தனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் யாரும் பங்கேற்காத நிலையில் முதல்முறையாக இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மரண தண்டனையில் இருந்து நிரந்தரமாக நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சியில் இது ஒரு பாசிட்டிவ் சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நிமிஷா பிரியா காப்பாற்றப்படுவார். இல்லையேல்......