

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவி வரும் கடுமையான போரால், உலகளவில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் முதல் கேஸ் சிலிண்டர் விநியோகம் வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும், கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் வணிக சிலிண்டர்களின் உற்பத்தியை எரிபொருள் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அவசர ஆலோசனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது
தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசின் தலைமைச் செயலர் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் கேஸ் சிலிண்டர்கள் போதுமான அளவு இருப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எரிபொருள் நிறுவனங்களிடம் முன்வைத்துள்ளது தமிழக அரசு. மேலும் தங்களிடம் உள்ள கேஸ் சிலிண்டர்களின் இருப்பு குறித்த விவரங்களை இன்று மதியத்திற்குள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு கேஸ் சிலிண்டர் வாங்கிய பிறகு, அடுத்த சிலிண்டர் வாங்குவதற்கான கால அவகாசம் 21 நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இந்த கால அவகாசம் 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் புரப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றை, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு பயன்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் சில உணவகங்களில் உணவுப் பட்டியல் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவகங்களை மட்டுமே நம்பி வெளியூரில் தங்கி இருக்கும் மாணவர்கள், இளைஞர்கள், தினக்கூலிகள் மற்றும் முதியோர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மணலியில் உள்ள ஐஓசி கேஸ் சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தில், வணிக சிலிண்டர்களின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது மேலும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு முழுக்க சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிக்கும். சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் தற்போது எழுந்துள்ள சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சினையை, தமிழக அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பதை பெரும் சவாலாக இருக்கும்.