

தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டைப் போன்றே மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையில், பகவந்த் மான் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு, பஞ்சாப் மாநில அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பெண்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் வகையில், ‘முக் மந்திரி மாவன் தியான் சத்கார் யோஜனா (Mukh Mantri Mawan Dhian Satikar Yojna)’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் படி பொதுப் பிரிவு பெண்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாயும், பட்டியலின பெண்களுக்கு 1,500 ரூபாயும் வழங்கப்படும்.
தகுதிகள்:
* பஞ்சாப் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
* முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுபவர்களும் இத்திட்டத்தின் கீழ் கூடுதலாகப் பயன் பெற முடியும்.
* பஞ்சாப் மாநில மக்கள் தொகையில் சுமார் 97% பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உதவித்தொகை யாருக்கு கிடைக்காது?
* தற்போதைய அல்லது முன்னாள் எம்.பி. (MP) மற்றும் எம்.எல்.ஏ.க்கள் (MLA).
* தற்போதைய மற்றும் முன்னாள் நிரந்தர அரசு ஊழியர்கள்.
* வருமான வரி செலுத்துபவர்கள்
விண்ணப்பம் தொடங்கும் நாள்:
பைசாகி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி முதல், இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அன்று முதல் பெண்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். சீக்கியர்களின் புத்தாண்டு மற்றும் அறுவடைத் திருநாளான இந்தப் பண்டிகை அன்று தான், பஞ்சாப் அரசு தனது புதிய நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கவுள்ளது.
சிறப்பு முகாம்:
பெண்கள் அனைவரும் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தாக்கல் செய்த 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், இத்திட்டத்திற்காக ரூ.9,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் பஞ்சாபில் தொடங்கப்பட இருப்பது, மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.