

பட்டா வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் பட்டா யார் பெயரில் இருந்தது உட்பட, கடந்த கால பட்டா வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
ஒரு வீடு அல்லது சொத்தை வாங்கும் போது, அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். இல்லையெனில் நாம் மோசடியில் சிக்கிக் கொள்வோம். இதற்காகவே பத்திரப் பதிவுத் துறை வாயிலாக வில்லங்க சான்றிதழ் (EC) வழங்கப்படுகிறது.
நிலத்தின் தற்போதைய உரிமையாளர் யார்? முந்தைய உரிமையாளர் யார்? சொத்து வங்கியில் அடமானத்தில் இருக்கிறதா மற்றும் சொத்தின் மீதான முந்தைய பரிமாற்றங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள வில்லங்க சான்றிதழ் நமக்கு உதவியாக இருக்கிறது.
ஆனால் பட்டாவை பொறுத்தவரை, அதில் சொத்து குறித்த முந்தைய விவரங்கள் எதுவுமே இருக்காது. இந்நிலையில் பட்டா வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள தமிழக அரசு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது
பட்டா வரலாறு என்பது சட்ட உரிமை ஆவணமாக இல்லை என்றாலும், ஒரு நிலத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவியாக இருக்கும். இந்த புதிய வசதியின் மூலம் நில மோசடிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிலம் தொடர்பான உரிமையில் வெளிப்படைத் தன்மை இருக்கும்.
நிலம் அல்லது வீடு வாங்குவோருக்கு பட்டா வரலாறு ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படும். தமிழக அரசின் துரித நடவடிக்கையால், https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பொதுமக்கள் எளிதாக பட்டாவை வாங்கி விடலாம்.
தற்போது வரை பட்டாவில், சொத்தின் முந்தைய பரிமாற்றங்கள் மற்றும் உரிமையாளர்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. இந்நிலையில் சொத்து பற்றிய முழுமையான உரிமை விவரங்களை மிக எளிதில் அறிந்து கொள்ள, தமிழக அரசின் வருவாய்த் துறை சார்பில் ‘பட்டா வரலாறு (Patta History)’ என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக இனி வில்லங்க சான்றிதழைப் போலவே, பட்டா வரலாற்றையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் ஒரு நிலத்தின் பட்டா இதற்கு முன்பு யார் யார் பெயரில் இருந்தது, எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது, எந்த ஆணையின் பேரில் பட்டா மாற்றம் நடந்தது மற்றும் எந்த காலக்கட்டத்தில் பட்டா யாரிடம் இருந்தது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் நிலத்தின் மீது ஏதேனும் மோசடிகள் நடந்திருக்கிறதா என்பதையும் இதன் மூலம் எளிதாக கண்டறியலாம்.
பட்டா விவரங்களை அறிந்து கொள்ள வில்லங்க சான்றிதழ் பெறும் புதிய நடைமுறையின் சோதனை முயற்சியானது, கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடங்கியது. முதற்கட்டமாக ஒரு தாலுகாவில் மட்டும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
இந்தப் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தமிழ்நாடு முழுக்க பட்டா வரலாறு வசதி விரைவில் விரிவுபடுத்தப்படும் என வருவாய்த் துறை அறிவித்துள்ளது. பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழைப் பெற பொதுமக்கள் குறிப்பிட்ட அளவில் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.
தற்போது 2014 ஆம் ஆண்டு வரையிலான பட்டா வரவாற்றை மட்டுமே எடுக்க முடியும் என வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. விரைவில் இந்த வசதியின் மூலம், 2014-க்கு முன்னர் இருந்த பட்டா விவரங்களையும் எளிதாக பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.