கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது முதலே, பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்து வரும் கூடுதல் வரி விதிப்பு, பொருளாதாரச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது.
ஏற்கனவே இந்தியாவுக்கு 50% கூடுதல் வரியை விதித்துள்ள அமெரிக்கா, தற்போது ஈரானுடன் வர்த்தகம் வைத்துக் கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானில், தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதைய ஆட்சியாளர்களை பதவி விலகுமாறு, அந்நாட்டு மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை நிறுத்தாவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் அரசு தெரிவித்திருந்தது.
போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை கடுமையாக விமர்சித்தது ஈரான். இந்நிலையில் அமெரிக்கா தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக வர்த்தகத்தில் கை வைத்துள்ளது. அதாவது ஈரானுடன் வர்த்தகம் வைத்துக் கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் 25% வரி விதிக்கப்படும் எனவும், இந்த வரி விதிப்புமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
2024-25 நிதியாண்டில் இந்தியா ஈரானுக்கு 1.24 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதேபோல், ஈரானிலிருந்து 0.44 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான மொத்த வர்த்தகம் 1.68 பில்லியன் டாலராக (சுமார் ரூ.14,000-ரூ.15,000 கோடி) உயர்ந்துள்ளது.
இதில் கரிம வேதிப்பொருட்கள் மட்டும் மிகப்பெரிய பங்காக 512.92 மில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது. அடுத்தபடியாக பழங்கள், பருப்புகள், சிட்ரஸ் பழங்களின் தோல்கள் மற்றும் மெலன்கள் 311.60 மில்லியன் டாலராகவும், கனிம எரிபொருட்கள், எண்ணெய்கள் மற்றும் சுத்திகரிப்பு தயாரிப்புகள் 86.48 மில்லியன் டாலராகவும் இருக்கின்றன.
ஏற்கனவே இந்தியாவுக்கு 50% கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில், ஈரானுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு மேலும் 25% அதிகரித்து, 75% வரி விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் வர்த்தக பிரச்சினை மேலும் தீவிரம் அடையலாம். மேலும் இந்த அறிவிப்பால், உலகளாவிய வர்த்தகமும் பாதிக்கப்படும்.
சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள், ஈரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக கருதப்பட்டாலும், இந்த நடவடிக்கை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி போன்ற நாடுகளையும் பாதிக்கும். இந்நிலையில் டிரம்பின் உலகளாவிய சுங்க வரிகளின் சட்டபூர்வத் தன்மை குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்தத் தீர்ப்பு டிரம்புக்கு எதிராக அமைந்தால், ஈரானின் வர்த்தக கூட்டாளிகளுக்கு வரி விதிக்கும் டிரம்பின் அதிகாரம் பாதிக்கப்படலாம்.
ஈரானில் நடந்து வரும் போராட்டங்கள், தற்போது ஆயத்துல்லா அலி காமெனெய் தலைமையிலான இஸ்லாமிய ஆட்சியை நேரடியாக குறிவைக்கின்றன. இந்தக் கலவரங்கள், 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமிய குடியரசின் ஆட்சிக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகின்றன.
கடந்த வார இறுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டனர். ஈரான் அரசு இந்த போராட்டங்களை அடக்க முயன்று வருகிறது. இதுவரை இந்தப் போராட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.