

சென்னையில் புறநகர் ரயில் சேவையை லட்சக்கணக்கான பயணிகள் தினசரி போக்குவரத்தகற்காக பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து வேளச்சேரி, செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புறநகர் ரயில் சேவையில் புதிய மாற்றமாக கடந்தாண்டு ஏப்ரலில் முதல் ஏசி ரயிலை அறிமுகப்படுத்தியது தெற்கு ரயில்வே. இந்த ஏசி ரயில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான ஏசி ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் புறநகர் ரயில் சேவையில் இரண்டாவது ஏசி ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை ஏசி ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 பெட்டிகளைக் கொண்ட புதிய ஏசி ரயில், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் சோதனை ஓட்டத்தில் உள்ளது. ஏற்கனவே ஆவடி முதல் அரக்கோணம் வரை முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
அடுத்தகட்ட சோதனைகள் முடிந்த பிறகு, ஏசி ரயில் பயணிகள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு வரும் சாதாரண புறநகர் ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. ஆனால் இயேசு வெயிலில் டிக்கெட் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்வதற்கு ரூ.80 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏசி புறநகர் ரயிலுக்கும் சீசன் டிக்கெட் விநியோகிக்கப்பட்டு வருகிறது இதற்கான ஒரு மாத சீசன் டிக்கெட் விலை ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முழுமையான குளிர்சாதன வசதி, ஜிபிஎஸ் ட்ராக்கர் மற்றும் தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏசி ரயிலில் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே இயங்கும் ஏசி புறநகர் ரயிலின் நேரங்கள், அடிக்கடி மாற்றப்படுகிறது.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப சென்னை முதல் அரக்கோணம் வரையிலான இரண்டாவது ஏசி ரயில் சேவையின் நேரமும் திட்டமிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.