ஆண்டிற்கு 3 சிறப்பு டெட் தேர்வுகள்: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பள்ளி கல்வித்துறை..!
நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்கள், மாநில அரசுகளின் ஆதரவை எதிர்நோக்கியது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் எப்போதும் ஆசிரியர்களுக்கு துணை நிற்போம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் இந்த ஆதரவால் ஆசிரியர்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆசிரியர்களை பாதுகாக்க ஆண்டுதோறும் சிறப்பு டெட் தேர்வுகளை நடத்தலாம் என தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ஆண்டுதோறும் 3 சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க வேண்டுமென்றாலோ அல்லது பதவி உயர்வு பெற வேண்டுமென்றாலோ, டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மூத்த வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தி சிறப்பு டெட் தேர்வை நடத்த முடிவு எடுத்தது. இதன்படி ஆண்டிற்கு 3 சிறப்பு டெட் தேர்வுகள் மற்றும் 1 வழக்கமான தேர்வு என இரண்டு ஆண்டுக்கு 8 டெட் தேர்வுகளை நடத்த தமிழக அரசு தீர்மானித்தது.
இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் எட்டு தேர்வுகளில் ஆசிரியர்கள் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றாள் தங்கள் பணியை காப்பாற்றிக் கொள்ள முடியும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், எப்போது சிறப்பு டெட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஓராண்டிற்கு 3 சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அரசு பள்ளி ஆசிரியர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் டெட் தேர்வு விவகாரம் கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணிபுரியும் ஆசிரியர்களின் வேலையைப் பாதுகாக்க, தமிழக அரசு மூத்த வழக்குரைஞர்களுடன் கலந்துரையாடி ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு முதல் ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் 3 சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும். ஆசிரியர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு சிறப்பு டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.