
அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய வேண்டுமெனில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த நடைமுறை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களும் டெட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதனால் அமைச்சரின் அறிவிப்பு ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது.
இனி 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் டெட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகியுள்ளது. மேலும் ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளே உள்ள ஆசிரியர்கள் மட்டும் டெட் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1.5 இலட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பணியில் தொடரவோ அல்லது பதவி உயர்வு பெறவோ முடியும். தேர்வை எழுத விரும்பாத ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் சிறுபான்மையினர் பள்ளிக் கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்ப்பு சாத்தியமா என்பதை ஆய்வு செய்ய 7 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் பின்பற்ற வேண்டும்; அதே நேரத்தில் தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும் உறுதுணையாக நிற்க வேண்டும் என தமிழக அரசு ஒரு ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்திற்கு தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையேற்றார். மேலும் சட்ட நிபுணர்கள், பள்ளிக் கல்வித் துறை செயலரான சந்திரமோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதைக் காட்டிலும், ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக சிறப்பு டெட் தேர்வை நடத்தலாம் என இக்கூட்டத்தில் சட்ட நிபுணர்கள் பரிந்துரைத்தனர். மேலும் ஆண்டுக்கு 2 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தினால், அது ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி ஆசிரியர்களுக்கு 2 ஆண்டுகளில் 4 சிறப்பு டெட் தேர்வுகள் நடைபெறும். இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆசிரியர்கள் தேர்ச்சி பெறலாம். வருகின்ற நவம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் டெட் தேர்வு நடைபெற இருக்கிறது. அது முடிந்தவுடன் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.
தமிழ்நாடு முதல்வர் ஜெர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் அவர் வந்த பிறகு, இதுகுறித்து மீண்டும் ஆலோசிக்கப்படும். அதன்பிறகே இறுதி முடிவுகள் வெளியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.