
நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teachers Eligibility Test) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1.75 இலட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆசிரியர் சங்கம் தெரிவித்தது. இருப்பினும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு துணை நிற்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதன்படி மூத்த வழக்குரைஞர்கள் மற்றும் நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்பபை எதிர்ப்பதைக் காட்டிலும், ஆசிரியர்களுக்கு எளிதான ‘சிறப்பு டெட் தேர்வை’ நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் ஆண்டிற்கு 2 டெட் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது.
ஆசிரியர் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆண்டுக்கு 3 சிறப்பு டெட் தேர்வுகளும், வழக்கமான முறையில் ஆண்டுக்கு 1 டெட் தேர்வையும் நடத்த வலியுறுத்தினர். பணியிலிருக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற இந்த நடைமுறை தான் எளிதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பணியில் நீடிக்கவோ அல்லது பதவி உயர்வு பெறவோ முடியும். இல்லையெனில் கட்டாய ஓய்வு அளிக்கப்படும். பணியில் சேர்ந்து 5 வருடங்கள் ஆகாதவர்களும், ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கும் மட்டுமே இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது தமிழக அரசு. அதே நேரத்தில் ஆசிரியர்களை பாதுகாக்கும் விதமாக ஆண்டுக்கு 3 சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 ஆண்டுகளில் 8 டெட் தேர்வை ஆசிரியர்கள் எழுத வாய்ப்பு கிடைக்கும். இதில் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால் கூட பணியில் நீடிக்க முடியும். இருப்பினும் இரண்டே ஆண்டுகளில் 8 டெட் தேர்வுகள் சாத்தியமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
ஒரு டெட் தேர்வை நடத்தி முடிக்கவே குறைந்தது 5 மாதங்கள் தேவைப்படும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அடுத்த 2 ஆண்டுகளுக்கு துரிதமாக செயல்பட வேண்டியது அவசியம். ஆசிரியர் சங்கம் வழங்கிய ஆலோசனையை தற்போது பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. இதன்மூலம் விரைவில் ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வரும் எனத் தெரிகிறது.