ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. எண்ணற்ற உயிர்கள் பலியான நிலையில், இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்னும் இரண்டே வாரங்களில் போர் முடிவுக்கு வந்து விடும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்றால் அதிகபட்ச வரியை விதிப்பேன் என கடந்த மாதம் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். உலகப் பொருளாதாரச் சந்தையில் டாலரின் மதிப்பை உயர்த்துவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் ட்ரம்ப், போரை நிறுத்த வர்த்தகத்தைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டேன் என்று அறிவித்திருந்தார்.
இந்தியா கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் கொள்முதல் செய்து வந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கும் 50% வரியை விதித்தார் ட்ரம்ப். பதவியேற்றது முதலே உலக நாடுகளுக்கு அதிகளவு வரியை விதித்து வரும் ட்ரம்ப், ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதிலும் தீவிரம் காட்டினார். இந்நிலையில் கடந்த வாரம் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆங்க்ரேஜ் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார் ட்ரம்ப். போர் நிறுத்தம் குறித்த இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 3 மணி நேரம் வரை நீடித்தது. இருப்பினும் போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை என்று கூறினார்.
இதற்கிடையில் சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து போர் குறித்து ஆலோசித்தார் ட்ரம்ப். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதில் ஐரோப்பிய நாடுகளும் தலையிட வேண்டும் என்று ட்ரம்ப் கூறிய நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோரை சந்தித்து போர் குறித்து ஆலோசனை நடத்தினார் ட்ரம்ப். இந்நிலையில் இன்னும் 2 வாரங்களில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து விடும் என ட்ரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பேசியதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “அமெரிக்க அதிபருடன் நடத்திய ஆலோசனையை ரஷ்ய அதிபர் என்னுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும்” எனத் தெரிவித்தார்.