
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி 24இல் தொடங்கிய போர், 3 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முழு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக நேற்றிரவு ரஷ்ய அதிபர் புவிளாடிமிர் புதினை, ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்ததால், உலக நாடுகள் மத்தியில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
அலாஸ்கா மாகாணத்தின் ஆங்க்ரேஜ் நகரில் ரஷ்யாவுக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் ‘உக்ரைனிற்கு ஆதரவு அளிப்போம்; ரஷ்யா இனி இருக்காது’ போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அமெரிக்க மக்கள் உக்ரைனிற்கு ஆதரவாக இருப்பதை இது உணர்த்துகிறது. புதின் - ட்ரம்ப் ஆகியோரின் சந்திப்புக்கு முன்பாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருப்பினும் பேச்சுவார்த்தை அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
ரஷ்யா தரப்பில் அதிபர் விளாடிமிர் புதின், பாதுகாப்புத் துறை அமைச்சர் பெலோசோவ், வெளியுறவு அமைச்சர் லாரவ் மற்றும் நிதியமைச்சர் சிலுன்னோவ் ஆகியோர் பங்கேற்றனர். புதின் மற்றும் ட்ரம்ப் இருவரும் அலாஸ்கா மாகாணத்திற்கு தனித்தனியே விமானத்தில் வந்து, அங்கிருந்து ஒரு காரில் பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் ஆங்க்ரேஜ் நகரில் உள்ள இராணுவ தளவாடத்தில் புதின் மற்றும் ட்ரம்ப் இருவரும் கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஆலோசனை நடத்தினர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பால், ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போரை முடித்துக் கொள்வதற்கான எந்த முடிவும் பேச்சுவார்த்தையில் எட்டப்படவில்லை என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர ஐரோப்பிய நாடுகளும் தலையிட வேண்டியது அவசியம். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். புதின் மற்றும் ஜெலென்ஸ்கியை சந்திக்க வைத்து போரை முடிவுக்கு கொண்டு வர அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா அதிபர் புதின் கூறுகையில், “உக்ரைன் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார். அவரது இந்த நிலைப்பாட்டிற்கு நான் உடன்படுகிறேன். பரஸ்பர ஒப்பந்தம் விரைவில் உக்ரைனில் அமைதியைக் கொண்டு வரும்” எனத் தெரிவித்தார்.
புதின் மற்றும் ட்ரம்ப் ஆகியோரின் சந்திப்பு போரை முடிவுக்கு கொண்டுவர இல்லையென்றாலும், போர் நிறுத்தத்திற்கான முதல்படியாக இது பார்க்கப்படுகிறது. ஆகையால் நடப்பாண்டின் இறுதிக்குள் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.