

உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் மோதி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளின் மீது ரயில் மோதும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை 3 பெண்கள் மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது லேசான மழையும் பெய்து கொண்டிருந்தது. இதனால் ஆடு மேய்க்கும் பெண்கள் குடை பிடித்தபடி தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
ஆடுகளும் தண்டவாளத்தில் முன்னே செல்ல, ஆடு மேய்க்கும் பெண்கள் பின்னால் நடந்து சென்றனர். இந்நிலையில் அந்த நேரத்தில் ரயில்வே டிராக்கில் இன்டர்சிட்டி ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனைக் கவனித்த கேட்மேன், ஆடு மேய்க்கும் பெண்களிடம் ரயில் வருகிறது ஓரமாக செல்லுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
கேட்மேனின் எச்ரிக்கையைத் தொடர்ந்து பெண்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கினர். ஆனால் தண்டவாளத்தில் சென்ற ஆடுகள் மட்டும் கீழே இறங்காததால், வேகமாக வந்த இன்டர்சிட்டி ரயில் ஆடுகளின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.
கேட்மேன் மட்டும் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்காமல் இருந்திருந்தால், ஆடு மேய்த்த 3 பெண்களும் ரயிலில் மோதி விபத்தில் சிக்கி இருப்பார்கள். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் ஆடு மேய்க்கும் பெண்கள் தப்பித்து விட்டனர். ஆனால் ஆடுகளின் மீது ரயில் வேகமாக மோதும் காட்சி காண்போரை கவலையுறச் செய்கிறது.
ரயிலின் சத்தத்தைக் கேட்டோ அல்லது கேட்மேனின் சத்தத்தைக் கேட்டோ ஆடுகளும் கீழே இறங்கியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். ஆடு மேய்க்கும் பெண்கள் தண்டவாளத்தில் ஆடுகளை கூட்டிச் சென்றதே விபத்திற்கு முக்கிய காரணம். தண்டவாளத்தில் செல்லாமல் கீழே சென்றிருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அடிக்கடி தண்டவாளங்களில் நடப்பதே, இதுபோன்ற ரயில் விபத்துகளுக்கு காரணமாகும். தண்டவாளத்தில் பொதுமக்கள் எப்போதும் நடக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் தண்டவாளத்தில் நடந்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்தால் தான் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கும்
ரயில்களின் முன்பகுதியில் ‘ஏரோடைனமிக் நோஸ் ஷேப்’ அமைப்பை பொருத்தினால் இதுமாதிரியான விபத்துகளைத் தடுக்கலாம். விலங்குகள் தண்டவாளத்தில் வந்தால், அவை ரயிலின் அடியில் விபத்தில் சிக்குவதைத் தடுக்கும் மற்றும் பாதுகாப்பாக ஓரமாக வழிமாற்றி விடும் வகையில் ஒரு ‘அனிமலல் டிப்லக்டர்’ அமைப்பை ரயில்வே துறையால் வடிவமைக்க முடியாதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விபத்துகளில் இருந்து காப்பாற்றும் பாதுகாப்பு வடிவமைப்பை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து, ரயில் மற்றும் விலங்குகள் இரண்டிற்கும் பாதுகாப்பான தீர்வை உருவாக்க அரசு முன்வர வேண்டும்.