கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அன்னதானம் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியாகியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகளும் கொண்டாட்டங்களும் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. பஞ்சத்தில் இருக்கும் நாடுகளுக்கு இந்த பண்டிகையே மிகப்பெரிய ஆதரவு. ஏனெனில், உணவு இல்லாமல் தவிக்கும் நாடுகளில் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அப்படித்தான் ஆப்பிரிக்கா நாடான நைஜிரீயா பெரும் பஞ்சத்தில் இருந்து வருகிறது. அங்கு லட்சக்கணக்கானோர் பட்டினியில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் அனம்ப்ரா மாகாணம் ஒகிஜா நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அன்னதானத்துக்கு தன்னார்வ அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.
இதனால், அந்த மக்கள் போட்டி போட்டுக்கொண்டு உணவை வாங்கச் சென்றனர். அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், தலைநகர் அபுஜாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது பரிசுகளை வாங்க போகும்போது அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். நைஜிரீயாவில் இது தொடர்க்கதையாகி வருகிறது.
இதேபோல்தான், இந்தாண்டு ஜூலை மாதம் இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் சிக்கந்தராவ் பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்திற்கு சமய போதகர் எனக்கூறப்படும் போலே பாபாவின் ' சத்சங்கிற்காக’ நிகழ்விற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 121 பேர் உயிரிழந்துள்ளனர். மிகவும் துயரமான சம்பவமாக கருதப்படும் இந்த உயிரழப்புகளுக்கு, பல நாடுகளின் தூதர்கள் இரங்கல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் பலரின் உடல்கள் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையின் உள்ளே பனிக்கட்டிகளின் மீது அடுக்கி வைக்கப்பட்டன.
இதுபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. எவ்வளவு பாதுகாப்பு நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டாலும், பஞ்சத்தினால் தவிக்கும் மக்களுக்கு அவை கண்களுக்குத் தெரியுமா என்ன?