
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழையால் 37க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மலைப்பகுதி முழுவதும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, கனமழையால் ரூ.400 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும், மேலும் மீட்புப் பணிகள் தொடரும் போது பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இமாசலபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அதிகனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் மட்டும் 11 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு அதிகமழை கொட்டி தீர்த்ததால் 3 இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கால்நடைகள், பொதுமக்களை இழுத்துச் சென்றது. ஒரு இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் அதிகனமழையால் இதுவரை 37 பேர் பலியாகி உள்ளதாகவும், மேலும் காணாமல் போன 29 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மண்டியில் மட்டும் இதுவரை 40 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து துனாக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 162 கால்நடைகள் பலியானதும் தெரியவந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட வீடுகள், 104 கால்நடை கொட்டகைகள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. 34 வாகனங்களும் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளன.
மாநிலம் முழுவதும், 250க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 14 பாலங்கள் மற்றும் 599 டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் சுமார் 700 குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் வருவாய்த் துறையின் சிறப்புச் செயலாளர் டி.சி. ராணா செய்தியாளர் சந்திப்பின் போது,
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் வருவாய்த் துறையின் சிறப்புச் செயலாளர் டி.சி. ராணா செய்தியாளர் சந்திப்பின் போது, இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமாக பொருள் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கருதுவதாகவும், ஆனால் உண்மையில் பாதிப்பு இன்னும் மிக அதிகமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பதாகவும், தற்போது வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடுதல் பணி, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை மற்றும் மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, ஊர்க்காவல் படையினர், துணைப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட மத்தியப் படைகள் அடங்கிய ஒருங்கிணைந்த குழுவால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் வரும் 7-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.