இந்தியாவுக்கு 4 தங்கம் வென்ற வீரருக்கு இந்த நிலையா? தெருவோரத்தில் வறுமையோடு போராடும் அமர்தீப் குமார்

இந்தியாவுக்காக 4 தங்கப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர் இன்று அன்றாட பிழைப்பிற்காக போராடி வருகிறார்.
Amardeep Kumar
Amardeep Kumarimage credit-timesofindia.indiatimes.com
Updated on

சர்வதேச அளவில் த்ரோபால் போட்டியில் இந்தியாவுக்கு 4 தங்கம் மற்றும் பல்வேறு பதக்கங்களை வென்று தந்தவர் தான் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 29 வயதான அமர்தீப் குமார்(எறிபந்து வீரர்). இவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அமர்தீப்புக்கு 13 வயதாக இருந்தபோது, ​​கோடை விடுமுறையின்போது உள்ளூர் விளையாட்டு வீரர் ஒருவர் விளையாட்டில் அமர்தீப்புக்கு இருந்த ஆர்வத்தைக் கவனித்து, ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் அவருக்கு இலவசப் பயிற்சி அளிக்க முன்வந்தார்.

அங்கு அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட விளையாட்டுகளில், த்ரோபால் அவர் மனதைக் கவர்ந்தது. பள்ளி முடிந்ததும் தனது தந்தையின் காய்கறி கடைக்கு உதவிய பின்னர் கடுமையான பயிற்சி எடுத்து, விரைவாக முன்னேறி இந்திய அணியில் இடம்பிடித்தார். 2015-ல் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் தனது முதல் சர்வதேச தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதைத் தொடர்ந்து, 2017-ல் காத்மாண்டுவில் நடந்த இந்தோ-நேபாள த்ரோபால் சாம்பியன்ஷிப், 2019-ல் பெங்களூருவில் நடந்த தெற்காசிய த்ரோபால் சாம்பியன்ஷிப் மற்றும் 2026-ல் ராஞ்சியில் நடந்த அதன் இரண்டாவது பதிப்பு ஆகியவற்றிலும் அவர் தங்கப்பதக்கங்களை வென்றார். இருப்பினும், இந்தப் பதக்கங்கள் அவருக்கு நிதிப் பாதுகாப்பையோ அல்லது அரசு வேலையையோ பெற்றுத் தரவில்லை.

இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக பலமுறை அதிக வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார் (உதாரணமாக மலேசியா செல்ல ரூ.65,000 கடன் வாங்கியுள்ளார்).

ஆனால் தற்போது அவருக்கு உரிய அரசு ஆதரவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாததால், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் அமர்தீப் குமார் தனது குடும்பத்தின் பொருளாதார சுமையை போக்கவும், வாங்கிய கடனை அடைக்கவும் ராஞ்சியின் வீதிகளில் காய்கறி விற்றுக் கொண்டும், வாடகை கார் ஓட்டியும் அவர் பிழைப்பு நடத்தி வருவதாக கூறினார்.

இந்தியாவுக்காக விளையாடிய தனது சக வீரர்கள் பலருக்கு ஹரியானா, சத்தீஸ்கர் மற்றும் பீகார் மாநிலங்களில் அரசு வேலைகள் கிடைத்தன என்றும், ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் விளையாட்டுத் கொள்கையின் கீழ் வேலை மற்றும் பண வெகுமதிக்காக அவர் அளித்த விண்ணப்பங்கள் எதுவும் பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Amardeep Kumar|எறிபந்து வீரர்
Amardeep Kumar|எறிபந்து வீரர்image credit-indiatoday.in

விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் அரசு வேலை மற்றும் ஊக்கத்தொகை கோரி 2016-ல் இருந்து அவர் விளையாட்டுத் துறையிடம் அளித்த மனுக்கள் இன்று வரை நிலுவையில் உள்ளதாக கூறினார். விளையாட்டுத் துறை இயக்குநரகத்திற்குத் தொடர்ந்து சென்றது தனக்கு அவமான உணர்வை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், அந்த முயற்சியை அதனால் கைவிட்டதாக கூறினார்.

த்ரோபால் ஒலிம்பிக் விளையாட்டுப் பட்டியலில் இல்லாத ஒன்றாக இருக்கலாம், ஆனால் அது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விளையாட்டு வீரர்களுக்கு தனி பாடத்திட்டம் & இலவச விமான பயணம்: தமிழக அரசின் புதிய விளையாட்டு கொள்கை!
Amardeep Kumar

பிரபலமான விளையாட்டு நட்சத்திரங்களுக்குக் கிடைக்கும் அதே கண்ணியம், அதிகம் அறியப்படாத விளையாட்டுக்களில் ஈடுபடும் வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அமர்தீப் நம்புகிறார்.

‘நாட்டிற்காக நாங்கள் சர்வதேச அளவில் தங்கப் பதக்கங்களை வென்றோம், ஆனால் அதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை’ என்று அவர் கூறினார்.

சமீபத்தில் அமர்தீப் குமார் தனது சிறிய தற்காலிக கடையின் தராசுக்கு பின்னால் வென்ற தங்கப் பதக்கங்களை தொங்கவிட்டபடி வியாபாரம் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வைரலானதை தொடர்ந்து அவரது தற்போதைய ஏழ்மை நிலைமை உலகிற்கு தெரியவந்துள்ளது.

நாட்டின் கொடி உயர்த்தி பிடித்த இந்த வீரருக்கு முறையான வேலை வாய்ப்போ அல்லது அரசு நிதியுதவியோ கிடைக்காததே இத்தகைய நிலைக்கு காரணம் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமர்தீப் குமாரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அமர்தீப் குமாருக்கு தேவையான உதவிகளையும், தகுதியான அரசு வேலையையும் வழங்குமாறு விளையாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
காமன்வெல்த்: வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு.!
Amardeep Kumar

தற்பொழுது ஜார்க்கண்ட் பால் கூட்டமைப்பு (Medha) போன்ற அமைப்புகள் அவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com