

காமன்வெல்த் நாடுகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த ஜூலை 23-ம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கியது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். தடகளம், நீச்சல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, டிராக் சைக்கிளிங் மற்றும் ஜூடோ உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடக்கின்றன. இதுவரை இந்தியா 4 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி என்பவர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்ததோடு, அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் - இந்தியாவின் பதக்க விவரம்:
1. மீராபாய் சானு:
48 கிலோ எடைப் பிரிவு பளு தூக்குதல் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். மேலும் மீராபாய் சானு காமன்வெல்த்தில் வென்ற 4வது பதக்கம் இது. அதோடு காமன்வெல்த்தில் தொடர்ந்து 3 தங்கப் பதக்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனையும் நிகழ்த்தி உள்ளார் மீராபாய் சானு.
2. ராஜா முத்துப்பாண்டி:
65 கிலோ எடைப் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
3. ரிஷிகாந்தா சிங்:
60 கிலோ எடைப் பிரிவு பளு தூக்குதல் போட்டியில், இந்தியாவின் ரிஷிகாந்தா சிங் 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
4. ஜந்து குமார்:
மாற்றுத் திறனாளர்களுக்கான பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் ஜந்து குமார் 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தார்.
பதக்கப் பட்டியலில் 39 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 19 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 6 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 3வது இடத்திலும் உள்ளன. 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.
பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா வென்ற 4 பதக்கங்களில் ஒரு பதக்கம் தமிழ்நாட்டு வீரரால் கிடைத்துள்ளது. காமன்வெல்த் அரங்கில் தமிழக வீரரின் அசாத்திய சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் விஜய்.
முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2 வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் என்பதால், இந்தியா மேலும் பதக்கங்களைக் குவித்து முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.