

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் விஜய் தலைமையிலான தவெக, தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், விஜய்யை முதல்வர் ஆக்குவது ஒன்றே எனது இலக்கு என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது வரை தமிழக வெற்றிக் கழகத்தில் எந்த கட்சியும் கூட்டணிக்கு வராத சூழலில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை தனித்தே சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் ராமதாஸ் தரப்பு பாமக உடன் தவெக நிர்வாகிகள் பேசி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 42% வாக்குகள் கிடைக்கும் என செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கோபியில் பேசிய தவெக-வின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “விஜய் மட்டும் பேச தொடங்கினால் சில கட்சிகளின் கதை அன்றோடு முடிந்து விடும். எதை, எப்போது, எங்கு, எந்த நேரத்தில் பேச வேண்டுமோ அதை விஜய் தெளிவாக பேசுவார். அப்போது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே திரும்பிப் பார்க்கும் நாளாக, அநத நாள் அமையும்.
எந்தக் கூட்டணியும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனித்தே 42% வாக்குகள் கிடைக்கும். அதனால் தான் டெல்லி நம்மைக் கண்டு பயப்படுகிறது. ஆனால் மற்ற கட்சிகளுக்கு கூட்டணி சேர்ந்தால் கூட 40% வாக்குகளை எட்டிப் பிடிப்பதே மிகவும் கடினமாக காரியம் தான்.
மனம் நொந்து போய் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அதிமுக என்னை தூக்கி வீசியதற்கு பிறகு, ஒரே நொடியில் என்னை தூக்கி விட்டவர் தவெக தலைவர் விஜய். விஜய்யை கோட்டைக்கு அனுப்பும் வரை நான் ஓயப் போவதில்லை.
ஜனநாயகன் படம் திரைக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்று, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக விஜய் களத்தில் இறங்கியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர், தலா 1 லட்சம் ரூபாய் செலவு செய்து விஜய்க்கு வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார்கள்” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
இன்னும் சில தினங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது. இந்நிலையில் விஜய் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் சேலம் மற்றும் நாமக்கலில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்தது காவல் துறை. சேலம் சீலநாயக்கன்பட்டியில் வருகின்ற பிப்ரவரி 13-ம் தேதி விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை. பகல் 12 மணி முதல் 3 மணிவ வரை கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்சாரக் கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தவெக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.