கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி? முழு வழிகாட்டி இதோ.!

Joint Patta to Individual Patta
Patta Transfer
Updated on

நில உரிமையாளர்கள் அனைவரும் பத்திரம் மற்றும் பட்டா குறித்த விஷயங்களில் அதிக கவனமுடன் இருத்தல் அவசியம். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நிலம் உங்களுக்குத் தான் சொந்தம் என்பதை பட்டாவும், பத்திரமும் தான் உறுதிப்படுத்துகின்றன.

தமிழ்நாடு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் பட்டாவில் நிலத்தின் வகை, நில உரிமையாளரின் பெயர் மற்றும் சர்வே எண் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் அடங்கியிருக்கும்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது, அந்த நிலத்திற்கு கூட்டு பட்டா வழங்கப்படுவது வழக்கம். கூட்டு பட்டா உள்ள ஒரு நிலத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ உரிமையாளர்கள் அனைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்நிலையில் கூட்டு பட்டாவில் இருந்து பிரிந்து தனி பட்டா வேண்டுமென்றால், அதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். இதற்கு முதலில் நிலத்தை உட்பிரிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இருவழிகளிலும் தனி பட்டா பெற விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழிமுறை:

* https://tamilnilam.tn.gov.in./ என்ற இணையதள முகவரிக்கு சென்று பட்டா மாறுதல் (Patta Transfer) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெற விரும்பினால், பின்வரும் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

*கூட்டு பட்டா

*நில வரைபடம்

* விற்பனை சான்றிதழ்

* சொத்து வரி ரசீது

* ஆதார் அட்டை

* குறிப்பாக கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெற விண்ணப்பிக்கும் போது, நிலத்தின் மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

* தனி பட்டா பெற விண்ணப்பித்த சில நாட்களில் சம்பந்தப்பட்ட விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர், நிலத்தை நேரில் ஆய்வு செய்வர்.

* பிறகு எவ்வித சட்ட சிக்கலும் இல்லையெனில், 30 முதல் 60 நாட்களுக்குள் தனி பட்டா கிடைத்து விடும்.

* தனி பட்டா விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்பதால், அதுகுறித்த தகவல்களை நம்மால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
உங்க கிட்ட தோராய பட்டா இருக்கா.? 45 நாட்களுக்குள் இதை செய்தே ஆக வேண்டும்.!
Joint Patta to Individual Patta

ஆஃப்லைன் வழிமுறை:

* கூட்டுப் பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவதற்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பிரிப்பு விண்ணப்பத்தை நிரப்பி, உட்பிரிவு கட்டணத்துடன் மனு அளிக்க வேண்டும்.

* இந்த மனுவுடன் கூட்டு பட்டா, நில வரைபடம், ஆதார் அட்டை மற்றும் சொத்து வரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.

* அதன்பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து, தனி சர்வே எண்ணை வழங்குவார்கள்.

தனி பட்டா பெறுவதற்கு நிலத்தின் மற்ற உரிமையாளர்கள் ஒப்புதல் அளிக்காவிட்டால், நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும்.

பட்டா பிரிவினை செய்யும் போது, எல்லை மற்றும் அளவீட்டு சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் தனி பட்டா பெற விண்ணப்பிப்பதற்கு முன்பு, நில உரிமை சிக்கல்களை தீர்த்து விடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் கடனுதவி.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?
Joint Patta to Individual Patta
logo
Kalki Online
kalkionline.com