
நாடு முழுவதும் அக்டோபர் 1-ம்தேதி முதல் பல முக்கிய விதிமுறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாதம் எந்த மாதிரியான மாற்றங்கள் வரப்போகிறது, அதனால் மக்கள் தங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்திற்கு என்ன செலவுகள் வரப்போகிறது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
சிலிண்டர் விலை :
சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சமையல் கேஸ் சிலிண்டர். சிலிண்டரின் விலை ஏறும்போது அது சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும். மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும். அந்த வகையில் அக்டோபர் 1-ம்தேதி சமையல் கேஸ் விலையில் மாற்றம் வருமா அல்லது அதே விலையில் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஆதார் அட்டை சேவை கட்டணம் உயர்வு:
அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்படுகிறது. பயோமெட்ரிக் (Biometric) மாற்றம் செய்ய, கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது. புதிய ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு இந்த கட்டணம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கு புதிய விதிமுறை:
முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், நாளை முதல் (அக்டோபர் 1) முன்பதிவுகள் திறந்த முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளைக் கொண்ட பயணிகள் மட்டுமே IRCTC வலைத்தளம் அல்லது செயலியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, IRCTC கணக்கு உள்ள எவரும் வழக்கம் போல் முன்பதிவு செய்யலாம். ரெயில் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்கும் இடைத்தரகர்களைத் தடுக்கும் வகையில் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது.
UPI விதிகளில் மாற்றம் :
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிமாற்ற அமைப்பான யூபிஐ சேவையில் அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது. தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ), தனிநபர்களுக்கிடையேயான பண கோரிக்கை (money request) சேவையை நீக்குகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் அதிகரித்து வரும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த முடிவின் காரணமாக, அனைத்து உறுப்பினர் வங்கிகள் மற்றும் PhonePe, Google Pay, Paytm போன்ற அனைத்து UPI செயலிகளும் இனிமேல், அக்டோபர் 1-க்குப் பிறகு P2P பணத்தை கோரும் பரிவர்த்தனைகளைத் தொடங்கவோ, வழிநடத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது.
ஓய்வூதியத் திட்டங்களில் மாற்றம் :
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) உள்ளிட்ட பல்வேறு பென்ஷன் திட்டங்களில் புதிய மாற்றங்கள் அமலாக உள்ளது. அந்த வகையில், அக்டோபர் 1 முதல், அரசு சாரா துறையின் சந்தாதாரர்கள் Multiple Scheme Framework - MSF கீழ் தங்கள் முதலீட்டில் 100% வரை பங்குச் சந்தை (Equity) விருப்பங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தற்போதைய MSF (Multiple Scheme Framework) என்ற புதிய விதியால் PRAN என்று சொல்லக்கூடிய நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணின் கீழ் பல திட்டங்களை வைத்திருக்கலாம். இதன் மூலம், அரசு சாரா என்.பி.எஸ். சந்தாதாரர்கள் இனி ஒரே பான் எண் (PAN) கீழ் பல திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். எனினும், ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்துக்கு மாற விரும்பாதவர்கள் தேசிய பென்சன் திட்டத்தைத் தொடரலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது.