
தனிநபர் அடையாள ஆவணங்களில் ஆதார் அட்டை தான் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், மானியம் பெறவும், சலுகைகளைப் பெறவும் ஆதார் அட்டையைத் தான் முதலில் கேட்கின்றனர். ஆதார் அட்டையில் புகைப்படம், பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கியிருக்கும். மேலும் ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். அப்போது தான் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.
இந்நிலையில் தற்போது ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணம் உயரப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒருவேளை கட்டணம் உயர்ந்தால் அது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும்.
ஆதார் கார்டு சேவைகளுக்கான கட்டணம் வருகின்ற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் உயரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் கட்டண உயர்வு சிறிய அளவில் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்தார். இருப்பினும் ஆதார் கார்டு சேவைக் கட்டண உயர்வு குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
ஆதார் கார்டில் முகவரி மாற்றம், மொபைல் எண்ணை சேர்த்தல் மற்றும் பிறந்த தேதியை மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு தற்போது ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தக் கட்டணம் 100 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. மேலும் புகைப்படம் மாற்றம் மற்றும் பிற புதுப்பிப்பு சேவைகளுக்கு 100 ரூபாயில் இருந்து 125 ரூபாயாக கட்டணம் உயரும் எனக் கூறப்படுகிறது.
அஞ்சல் அலுவலகம், வங்கிகள், அரசு மற்றும் தனியார் இ-சேவை மையங்களில் புதிய ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஆதார் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி உள்ளது. இந்நிலையில் ஆதார் திருத்தக் கட்டணம் உயர்ந்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே ஆதார் திருத்தங்கள் சரியான முறையில் நடைபெறவில்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
அதாவது ஆதார் திருத்தங்களுக்கு விண்ணப்பித்த பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் சரியாக இல்லையெனக் கூறி ஆதார் ஆணையம் ரத்து செய்து விடுகிறது. இந்நிலையில் ஆதார் சேவைக் கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதார் சேவைக் கட்டணத்தை உயர்த்தினாலும் பரவாயில்லை; ஆனால் ஆதார் திருத்த நடவடிக்கைகள் ஆதார் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.