

கிளிமஞ்சாரோ சிகரமானது தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சுமார் 19,340 அடி உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலையாகும். இந்த சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை என்றாலும் ஆப்பிரிக்க கண்டத்தை பொறுத்தவரை இது பெரியமலை.
இயற்கை எழிலுடன் கூடிய இந்த சிகரத்தை தொடுவது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. இதன் உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் ஏறுவதற்கு எளிதாக கருத்தப்பட்டாலும் இந்த வழி பயணம் ஆபத்தானதாக கூறப்படுகிறது.
மூச்சு விடுவதில் சிரமம், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்ற பாதிப்புகள் மலையேறும் அனைவருக்குமே ஏற்படும் என்று கூறப்படுகிறது. சிலர் பாதி வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள்.
இந்த கிளிமஞ்சாரோ மலை ஒரு எரிமலை என்றாலும், இப்போது செயலிழந்து இருப்பதால், எந்த பயமும் இல்லை. ஆனால், வருங்காலத்தில் மீண்டும் இது உயிர்த்தெழும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சமவெளிக்கு மேலே உயர்ந்து நிற்கும் கிளிமஞ்சாரோ மலையின் ஒரு சரிவு காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு 1973ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சொத்தாகவும் இம்மலை குறிக்கப்பட்டது. இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ்செல்வி தலைமையில், தமிழகத்தில் காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் உள்பட 10 பேர் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு 5 வயதில் சிவவிஷ்ணு என்ற மகன் உள்ளார்.
சிவவிஷ்ணு, காங்கேயத்தை சேர்ந்த 7 வயதான பாரி, 10 வயதான இன்பா, கோவையை சேர்ந்த 12 வயதான மனு சக்ரவர்த்தி, சென்னையை சேர்ந்த 25 வயதான மகேசுவரி, கடலூரை சேர்ந்த 32 வயதான சக்திவேல், காங்கேயத்தை சேர்ந்த 40 வயதான அமர்நாத் உள்பட 10 பேர், ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தனர்.
இவர்களுடன் தாம்பரத்தை சேர்ந்த 13 வயதான ரோஷன் சிம்ஹா தனது தந்தை பாபுவுடன் இந்த சிகரத்தில் 4,720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார்.
5 வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிய 3-வது சாதனையாளர் என்ற இடத்தை சிறுவன் சிவவிஷ்ணு பிடித்தார்.
விருதுநகர் மாவட்டத்தை் சேர்ந்த சிவவிஷ்ணு மற்றும் 5 சிறுவர்கள் உள்பட தமிழகத்தை சேர்ந்த 10 பேர் முதல்முறையாக கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் 13 வயது சிறுமி ஏறி சாதனை படைத்தார். அதுவும் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். அதனை தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பஞ்சாப்பை சேர்ந்த டெக்பீர் சிங் என்ற 5 வயது சிறுவன் கிளிமாஞ்சாரோ சிகரத்தை தொட்டுள்ளார்.