50 வயதாகும் இசைஞானியின் "அன்னக்கிளி".. மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகுமா..?

50 Years annakili relesae
50 Years annakili relesaesource:oneindiatamil
Updated on

இந்தியத் திரையிசையின் அடையாளமாக விளங்குபவர் இசைஞானி இளையராஜா என்றால் அது மிகையல்ல.

இந்திய அரசின் மிக உயரிய பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகளுடன், பின்னணி இசையில் (Background Score) புதிய தரத்தை உருவாக்கியவர். இந்தியாவில் சிம்பொனி இசையை உருவாக்கிய முதல் இந்திய இசையமைப்பாளர்களில் ஒருவர்; மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் (2022-இல்) என்ற அந்தஸ்தைப் பெற்றவர். இவர் படைத்த சாதனைகள் சொல்லவேண்டுமென்றால் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு அவர் செய்த சாதனைகள் பல.

இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் இளையராஜாவின் புகழுக்கு அடித்தளமிட்ட படம் தான் அன்னக்கிளி.

1976-ம் ஆண்டு மே 14 அன்று வெளியான இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 50 வயதில் இருக்கும் அன்னக்கிளி படப் பாடல்கள் குறித்த நினைவலைகள் இங்கு..

80 ஆம் ஆண்டு காலகட்டத்தில் செல்போன்களும் , இணையதளங்களும் இல்லாத நிலையில் பேருந்து முதல் விழாக்கால ஸ்பீக்கர் வரை கொடி கட்டி பறந்தது இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் என்றால் மிகையல்ல . தமிழகத்தின் அடிப்படையான கிராமிய உணர்வை மேலும் அதிகப்படுத்திய பாடலாக தான் இன்றும் பார்க்கப்படுகிறது இளையராஜா முதன்முதலில் இசையமைத்த அன்னக்கிளி படத்தின் பாடல்கள் தான்.

இன்று உலகமெங்கும் இசை மேதை என அறியப்பட்ட இளையராஜா முதன்முதலில் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம்தான் அன்னக்கிளி. தமிழ் திரையுலகில் முக்கியமான கதை வசனகர்த்தாவான பஞ்சு அருணாசலத்தின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் அன்னக்கிளி என்பதுடன் இளையராஜாவின் முதல் பட வாய்ப்புக்கு காரணமும் பஞ்சு அருணாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் “மச்சானைப் பார்த்தீங்களா”, “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” போன்ற பாடல்கள் கிராமிய இசை பாணியை மக்கள் மத்தியில் பெரிதும் கொண்டு சென்றன. குறிப்பாக அதுவரை கர்நாடக இசையின் பின்னணியில் இசைக்கப்பட்டு வந்த பாடல்களைக் கேட்டு பழக்கப்பட்ட மக்களுக்கு இளையராஜாவின் தமிழ் நாட்டின் கிராமிய இசையையும் மேற்கத்திய இசை அமைப்பையும் இணைத்த புதிய பாணி, வித்யாசமான அதே சமயம் ஒரு புதிய அனுபவத்தை தந்தது. இதன் காரணமாக முதல் படத்திலேயே இசையமைப்பாளர் யார் என்ற தேடுதலில் இளையராஜா உடனே கவனம் பெற்றார்.

படத்தின் பாடல்களுக்காகவே பல திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியதாகத் தகவல்கள் உண்டு. இதில் பாடிய எஸ்.ஜானகி, பி. சுசீலா, மலேசியா வாசுதேவன் போன்றோரும் புகழ் பெற்றனர். மேலும் படம் மிகப்பெரிய வர்த்தக வெற்றியுடன் பல பாராட்டுகளை பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு இளையராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இளையராஜா கிராமிய இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை ஆகியவற்றை இணைத்து தனக்கென புதிய பாணியை உருவாக்கினார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து "இசைஞானி" ஆனார். இவரது ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்று வரை பிரபலமாக உள்ளன. வயதைப் பின்தள்ளி இன்னும் அதே உற்சாகத்துடன் திரையிசையில் பங்கு பெற்று வருவது சிறப்பு.

இவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்த அன்னக்கிளி பழைய கிளாசிக் திரைப்படமாக தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் மீண்டும் பார்வைக்கு வந்துள்ளது. எனினும் ரீரிலீஸ் ஆக படத்தை மீண்டும் பெரிய திரையில் காண வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். “அன்னக்கிளி” படத்தையும் ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்று இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்னக்கிளி வெளிவந்து 50 வருடங்கள் ஆனாலும் இசை மேதை தந்த முதல் படப் பாடல்களாக தமிழ்த்திரை இசையில் தனி இடம் இருக்கும் என்கிறார்கள் இசைப்பிரியர்கள்.

இதையும் படியுங்கள்:
முன்னணி ஹீரோக்களின் 100வது படம்.... ஹிட்டா? ஃபெய்லா? ஒரு பார்வை...
50 Years annakili relesae
logo
Kalki Online
kalkionline.com