

சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்க்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறவில்லை எனில் இன்று முதல் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. மேலும் சில நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிவதாலும், பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெறிநாய்க் கடி பிரச்சினை இந்திய அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.
இந்நிலையில் நாய்க் கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி செல்லப்பிராணிகளை வளர்ப்போர் முறையாக அதனை பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியானது. பதிவு செய்யப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடிக்க கால்நடை மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி இனக்கட்டுப்பாட்டு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பதிவு செய்யப்படாத செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு இன்று முதல் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், “இதுவரை சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 98,523 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதில் 56,378 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே முறையான உரிமம் பெறப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. மீதமிருக்கும் 40,274 செல்லப்பிராணிகளுக்கு தற்போது வரை உரிமம் பெறப்படாமலேயே உள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற நேற்று தான் கடைசி நாள் என்பதால், அனைத்து சிறப்பு முகாம்களிலும் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2,930 பேர் தங்களது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்றனர்.
ஒட்டுமொத்தமாக தற்போது வரை சென்னையில் 50 சதவீத செல்ல பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று முதல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட உள்ளனர். இதன்படி இன்று முதல் வீடு வீடாக சென்று செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா? அல்லது இல்லையா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஆய்வில் உரிமம் பெறப்படாத செல்லப்பிராணிகளின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய பிறகு உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உடனே உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதும் அவசியம்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செல்லப்பிராணிகள் பாதுகாப்பாக வளர்க்கப்பட வேண்டும் என்பதையும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.