

சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இணைக்கப்பட்ட சாதனங்களை ஒழுங்குபடுத்தவும் மேற்கொள்ளப்படும் ஒரு விரிவான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விதிமுறைகளைப் பின்பற்றாத சீன கண்காணிப்பு நிறுவனங்கள், இணைய வசதியுள்ள சிசிடிவி கேமராக்களை ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. அதாவது இந்தியாவில் தரச்சான்றிதழ் (STQC/BIS) பெறாத மற்றும் பாதுகாப்பற்ற, இணைய வசதியுடன் கூடிய (Internet-enabled) சீன தயாரிப்பு சிசிடிவி கேமராக்கள் (CCTV) விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான கவலைகள் காரணமாக, சீன ஐபி கேமராக்கள் (சிசிடிவி கேமராக்கள்) மீது இந்தியா தடை விதித்து இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது அனைத்து சிசிடிவி கேமராக்களுக்குமான முழுமையான தடை அல்ல, மாறாக தரவு பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யாத, சீன சிப்செட்களைப் பயன்படுத்தும் குறிப்பிட்ட வகை கேமராக்களுக்கு மட்டுமே இந்த தடை பொருந்தும்.
சீன தயாரிப்பு கேமராக்கள் வழியாக தரவுகள் திருடப்படலாம் மற்றும் ஹேக்கிங் செய்யப்படலாம் என்ற பாதுகாப்பு அச்சத்தின் காரணமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தரவுக் கசிவுகள் அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகல் போன்ற சாத்தியமான அபாயங்களைத் தடுப்பதற்காக, புதிய விதிகளின்படி, நம்பகமான சான்றிதழ், உள்ளூர் சோதனை மற்றும் கடுமையான ஒப்புதல்கள் ஆகியவற்றில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தப்பட உள்ளது. சான்றிதழ் பெறாத தயாரிப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
புதிய விதிகளின்படி, இந்தியாவில் விற்கப்படும் எந்தவொரு இணைய இணைப்புள்ள சிசிடிவி கோமராக்களும், தரப்படுத்தல் சோதனை மற்றும் தரச் சான்றிதழ் Standardisation Testing and Quality Certification (STQC) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சான்றிதழ் பெற வேண்டும். இதில் ஹிக்விஷன்(Hikvision), தகுவா (Dahua) மற்றும் டிபி-லிங்க் (TP-LINK) போன்ற நிறுவனங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும். ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சான்றிதழ் தேவைகளைப் பூர்த்தி செய்யாத வரையில், இணைய வசதியுள்ள கேமராக்களை விற்பனை செய்வதிலிருந்து இந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும். மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கேமராக்களின் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து அரசு கண்காணிக்கும்.
இறக்குமதி செய்யப்படும் கண்காணிப்புக் கருவிகளுடன் தொடர்புடைய இணையப் பாதுகாப்பு அபாயங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலையே இந்த ஒழுங்குமுறைக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
குறிப்பாக, வெளிப்படையற்ற விநியோகச் சங்கிலிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளில், மறைக்கப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், பாதுகாப்பற்ற மென்பொருள் வடிவம் மற்றும் தொலைநிலை சுரண்டல் அபாயம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இனிமேல் இறக்குமதி செய்யப்படும் சிசிடிவி கேமராக்களில் அதன் முக்கிய அங்கமான சிப் செட் எந்த நாட்டை சேர்ந்தது என்பதை நிறுவனங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
சுருக்கமாக, தரமான, பாதுகாப்பான, குறிப்பாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட (Made in India) சிசிடிவி கேமராக்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான சிசிடிவி, கேமரா சந்தையில் இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். உள்நாட்டு சிசிடிவி கேமராக்களுக்கு சந்தையில் மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படும்.
கடந்த ஆண்டு வரை, அனைத்து சிசிடிவி விற்பனைகளிலும் சீன பிராண்டுகள் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிராண்டுகள் முன்னேற்றம் கண்டதால், இந்தப் பங்கு குறைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் சிபி பிளஸ்(CP Plus), க்யூபோ(Qubo), பிராமா(Prama), மேட்ரிக்ஸ் மற்றும் ஸ்பார்ஷ்(Bosch) போன்ற நிறுவனங்களின் சிசிடிவி கோமராக்கள் பெரியளவில் விரிவடைந்துள்ளன. அந்த நிறுவனங்கள் சீனரல்லாத உதிரிபாகங்களை(Chinese SOC), குறிப்பாக தைவான் சிப்செட்டுகளைச்(Taiwan SOC) தங்கள் சிசிடிவி பிராண்டுகளை மறுவடிவமைத்து, தங்கள் மென்பொருளையும் (firmware) உள்நாட்டிலேயே உருவாக்குகின்றன.