தற்போது நடைபெறும் குற்றங்களை கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் இணையம் வழியாக இணைக்கப்பட்டிருப்பதால் எங்கிருந்து வேண்டுமானாலும் சிசிடிவியை கண்காணித்து ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் கண்காணிப்பு கேமராக்களை ஹேக் செய்வதை தடுக்கும் முறைகள் குறித்தும் கண்காணிப்பு கேமராக்களை வாங்கும்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
சிசிடிவி கேமராக்களில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை முறையாகப் பயன்படுத்தினால் ஹேக் செய்யாமல் பாதுகாக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களிலும் மேக் பைன்டிங் (Mac Binding) என்ற அம்சம் உள்ளதால் ஒவ்வொரு தயாரிப்புக்கும் தனித்துவமான (unique) எண் இருக்கும். சிசிடிவியை செல்போனில் மட்டுமே திறக்கப்பட மற்றும் ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டு பாஸ்வேர்டு பதிவிட வேண்டும்.
தனியார் நிறுவன ஊழியர்கள் கண்காணிப்பு கேமராவை பொருத்திய பிறகு தகவல்கள் கசியாமல் இருக்க அதற்கான பாஸ்வேர்டை உடனே மாற்றி விட வேண்டும்.
சிசிடிவி கேமரா தொடர்புடைய நிறுவனங்கள் வழக்கமான (Default) பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்தி வருவார்கள் என்பதால் பாஸ்வேர்டை எவ்வாறு மாற்றுவது என்று நிறுவனங்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டு மாற்றிவிட வேண்டும்.
குறிப்பிட்ட நபர்களை தவிர வேறு யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்காமல் இருக்க கண்காணிப்பு கேமராக்களுக்கு ஃபயர்வால் (FIREWALL) போடப்பட வேண்டும்.
உள் நுழைவதற்கு ஒவ்வொருவருக்கும் ஐடி கொடுக்கப்பட்டு இருந்தாலும் ஃபயர்வால் மென்பொருளை அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது எல்லாவற்றையும் மீறி யாராவது உள் நுழைந்தால் எச்சரிக்கை மணியை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கலாம்.
யார் எதைச் செய்ய வேண்டும் என்பது துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்கும் என்பதால் யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் இருப்பதற்கு கண்காணிப்பு கேமராக்களில் அதற்கான பாதுகாப்புக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
சிசிடிவி கேமரா ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் காவல்துறையில் புகார் அளிப்பதோடு குறிப்பிட்ட நேரத்தில் எந்த ஐ பியுடன் இணைக்கப்பட்டிருந்தது என்பதை பிஎஸ்என்எல் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இந்திய அரசின் வழிகாட்டுதல்
இந்தியாவுடன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இருந்து சிசிடிவி கொள்முதல் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறு ஆய்வகங்களுக்கு இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு துறை (MEITY) அறிவுறுத்தி உள்ளதால் இந்தியாவில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள், சீனா, தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு முக்கிய வீடியோ காட்சிகள் அல்லது படங்கள் கசியும் அபாயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் கண்காணிப்பு கேமராக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது.
கண்காணிப்பு கேமராக்களை வாங்கும்போது கடைபிடிக்க வேண்டியது:
அரசால் வாங்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் நம்பகமான இடத்தில் இருந்து பொருள்கள் (components) வந்துள்ளதை உறுதி செய்வதோடு, விநியோக சங்கிலி, போலிகளைத் தடுப்பது (counterfeit mitigation), மால்வேர் (malware) கண்டறிதல், கண்காணிப்பு கேமராக்களில் SoC (system on chip), வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருள் (firmware) ஆகியவற்றின் மூலத்தை ஆய்வகங்களில் பரிசோதிக்க வேண்டும் எனவும் இந்திய அரசின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வீடியோ காட்சிகள் வெளியில் செல்வதை தடுக்கும் வகையில் வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை சர்வீஸ் செய்ய வருகிறவர்கள் நம்பிக்கை கூடியவர்களாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: கண்காணிப்பு கேமரா ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.