
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடக்க உள்ளது. அதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நாளை முதல் 19-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருப்பதியில் உள்ள சத்யநாராயணபுரம், பைராகிப்பட்டேடா, ராமாநாயுடு பள்ளிகள், விஷ்ணு நிவாசம், சீனிவாசம், பூதேவி வளாகங்கள் ஆகிய மூன்று பக்தர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் 94 கவுண்டர்களில் டோக்கன்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முதல் 3 நாட்களுக்கு (10, 11, 12-ந்தேதி) வைகுண்ட துவார தரிசனத்துக்காக இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி வியாழக்கிழமை (இன்று) அதிகாலை 5 மணியில் இருந்து சுமார் 1.20 லட்சம் டோக்கன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அமைத்த கவுண்டர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இரவே கூடினர்.
அதில், சீனிவாசம் தங்கும் விடுதி திருப்பதி பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ளதால், அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள கவுண்ட்டர்கள் முன்னால் திரண்டு இருந்தனர். நேற்று இரவு சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்ட்டர்களில் நுழைய முயன்றனர். அந்த நேரத்தில் பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கூட்டத்தை நிர்வகிக்க போதுமான ஏற்பாடுகள் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் இறந்தனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 10 பேர் மோசமான உடல்நிலையில் உள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றதால் பலருக்கு உடலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு கழுத்து பகுதியில் மக்கள் மிதித்ததில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். திருப்பதி திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட துவார தரிசனத்திற்காக டோக்கன் பெறுவதற்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் காணொலி காட்சி மூலம் கலெக்டரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.
இலவச தரிசன டோக்கன்கள் பெற காத்திருந்த பக்தர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 6 பக்தர்கள் பலியான சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.