
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இந்திய வம்சாவளியினர் அரசியலில் கலக்கி வருவதும், அதிபர், பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பல நாடுகளில் முக்கிய பதவிகளில் உள்ள இந்திய வம்சாவளியினர் தொடர்பான பட்டியல் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி, இந்திய வம்சாவளியினர் 200க்கும் மேற்பட்டோர், 15க்கும் மேற்பட்ட நாடுகளில் முக்கிய அரசியல் பதவிகளில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நம் வெளியுறவுத் துறை புள்ளி விபரங்களின்படி, 3.2 கோடி இந்திய வம்சாவளியினர் உலகெங்கும் பரவியுள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த இங்கிலாந்தின் பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்று, உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக். 210 ஆண்டுகளில் இங்கிலாந்தை ஆட்சி செய்யும் மிக இளைய பிரதமர் இவர்தான். அந்த நாட்டின் முதல் இந்து பிரதமரும் இவரே.
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்தார்.
அமெரிக்காவில் வருகிற 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் நடந்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் போட்டியிட்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 6 பேர் வெற்றி வாகை சூடினர்.
வெற்றி பெற்ற பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, அமி பேரா, சுகாஸ் சுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீ தனேதர் ஆகிய 6 பேரும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
'இந்திய-அமெரிக்கர்களின் காட்பாதர்' என்று அழைக்கப்படுகிறார் அமி பேரா. மற்ற இந்திய வம்சாவளி அரசியல் தலைவர்களை காட்டிலும் அமெரிக்க அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்த நபராக திகழ்கிறார். இவர் தொடர்ந்து 7-வது முறையாக கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதனிடையே பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவியேற்றவர்களில் சுகாஸ் சுப்பிரமணியம், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா மற்றும் ஸ்ரீ தனேதர் ஆகிய 4 பேரும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்க வரலாற்றிலேயே பிரதிநிதிகள் சபையில் அதிக இந்து எம்.பி.க்கள் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் இந்திய வம்சாவளி தலைவர்கள் பலரும் உயர் பதவிகளில் இருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.