பானிபூரி வியாபாரிக்கு வந்த சோதனை
தெரு உணவு விற்பனையாளர்கள் பாரம்பரியமாக முறைசாரா துறையில் இருந்து வருகின்றனர். எனவே அவர்கள் சிறு அளவிலான வணிகத்தின் காரணமாக வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், Razorpay மற்றும் PhonePe போன்ற டிஜிட்டல் கட்டண தளங்களின் அதிகரிப்பால், இந்த விற்பனையாளர்கள் பலர் இப்போது ஸ்கேனரின் கீழ் உள்ளனர்.
தமிழகத்தில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் பானிபூரி என்றாலே உணவுப்பிரியர்களுக்கு அலாதி பிரியம். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பானிபூரிக்கு அடிமை என்று சொன்னால் மிக மிகையாகாது. 'சாட்' என்று சொன்னால் பலருக்கும் முதலில் நினைவில் வருவது பானிபூரி தான். பெரும்பாலும் வடமாநில வியாபாரிகள்தான் பானிபூரி விற்பார்கள். இதற்கிடையே தமிழ்நாட்டில் பானிபூரி விற்கும் வடமாநில வியாபாரி ரூ.40 லட்சத்துக்கு பானிபூரி விற்றுள்ளதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2023-24 நிதியாண்டில் ரூ. 40 லட்சம் ஆன்லைனில் பணம் செலுத்தியதாகக் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பானி பூரி விற்பனையாளர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் ஸ்கேனரின் கீழ் வந்துள்ளார். காரணம், 2023 - 24 ம் ஆண்டில் மட்டும் இவரது வங்கிக்கணக்கில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மட்டுமே ரூ 40 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாம்.
கடந்த டிசம்பர் 17-ம்தேதி அன்று தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மற்றும் மத்திய ஜிஎஸ்டி பிரிவு விற்பனையாளருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ரேசர் பே மற்றும் ஃபோன் பே ஆகியவற்றின்கீழ் இந்த பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், வரம்பை மீறிய தொகை பரிமாற்றம் நிகழ்ந்த பின்னரும் ஜிஎஸ்டி பதிவு இல்லாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
40 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள வணிகங்கள் பதிவு செய்து ஜிஎஸ்டி வரி விதிப்பு விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. இந்த நோட்டீஸில், விற்பனையாளரை நேரில் ஆஜராகி, கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் தொடர்பான நிதி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 17-ந்தேதி என குறிப்பிடப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் வைரலானதை தொடர்ந்து சமூக ஊடக தளங்களில் பல்வேறு விவாதங்களையும் பெருங்கொத்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சில பயனர், தங்கள் கார்ப்பரேட் வேலைகளை விட்டுவிட்டு தெருக்களில் பானிபூரி விற்கப் போவதாகக் கூறியதால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர். UPI பேமெண்ட்கள் இந்தியர்களிடையே பிரபலமடைந்து வருவதால், பல தசாப்தங்களாக பணத்தை ஏற்றுக்கொண்ட பல தெரு உணவு விற்பனையாளர்கள் டிஜிட்டல் பேமெண்ட்டுக்கு மாறி வருகின்றனர்.
இருப்பினும், இந்த நோட்டீஸ் எந்தளவுக்கு உண்மையானது, அந்த பானிபூரி வியாபாரி யார், தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் கடை வைத்திருக்கிறார் என்பது அதிகாரிகளின் விசாரணையில்தான் வெளிச்சத்துக்கு வரும்.