2024 ஆம் ஆண்டு விமானப் பயணிகளுக்கு ஒரு மோசமான ஆண்டாகவே இருந்துள்ளது. அதுவும் இந்த கடந்த வாரம் மட்டும் இரண்டு பெரிய விபத்துகள் மக்களை கதிகலங்க வைத்துள்ளன.
இந்த ஆண்டு நிகழ்ந்த கோரமான விபத்துகளில் சில..
1. ரஷ்ய விமான விபத்து
2024 ஆம் ஆண்டின் முதல் விமான விபத்து ஜன.24 அன்று ரஷ்யாவிலுள்ள பெல்கிரட் பகுதியில் நடந்தது. இதில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 65 உக்ரைன் போர்கைதிகள் உள்பட 74 பேர் இறந்தனர். இந்த விமான விபத்திற்கு உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது.
2. மீண்டும் ரஷ்ய விமானம்
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது விமான விபத்தும் ரஷ்யாவில் நிகழ்ந்தது. மார்ச்.12 ஆம் தேதி இவானோவோவா மாநிலத்தில் ரஷ்யாவின் இலியுஷின் ஐஎல்-76 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் எஞ்சினில் தீ பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
3. ஈரான் ஹெலிகாப்டர் விபத்து
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மே.19 அன்று புறப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் 600 கி.மீ தொலைவில் அஜர்பைஜானின் எல்லை அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ரஹிம் ரைஸ், வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
4. மலாவி விமான விபத்து
ஜூன் 10 அன்று மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் காணாமல் போயுள்ளது. பின்னர் தேடுதல் வேட்டையில் விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உள்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு மோசமான வானிலை காரணம் கூறப்பட்டது.
5.நேபாள விமான விபத்து
ஜூலை 24 அன்று நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பொக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இந்த விபத்து நடைற்றுள்ளது.
6. பிரேசில் விமான விபத்து
பிரேசிலின் வின்ஹெடோ நகரிலிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 62 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்பட வில்லை. அது பற்றிய விசாரணைகள் நடந்து கொண்டுள்ளது.
7. ஜெர்மன் விமான விபத்து
நவ.25 அன்று, வில்னியஸ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போயிங் 737 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் இறந்துள்ளனர்.
8. அஜர்பைஜான் விமான விபத்து
டிச.25 கிறிஸ்துமஸ் அன்று, அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி மாநகரத்திற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம், கஜகஸ்தானின் அக்டாவ் என்ற இடத்தில் அவசரமாக தரையிறங்கும் போது விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து தீப்பிடித்தது. விமானத்தில் பயணித்த 67 பேரில் 38 பேர் தீக்காயத்தில் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து தங்கள் வான்வெளியில் நடந்துள்ளதால் ரஷ்ய அதிபர் புடின், அஜர்பைஜான் அதிபரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆயினும் விபத்திற்கு பொறுப்பேற்கவில்லை.
9. தென்கொரிய விமான விபத்து
பாங்காக்கில் இருந்து டிச.29 அன்று தென் கொரியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம், தென் கொரியாவின் முவான் விமானத்தில் தரையிறங்கும் போது சக்கரங்கள் திறக்கப்படாததால் பெரும் விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் பயணித்த 181 பேரில் 179 பேர் இறந்துள்ளனர். இந்த வருடத்தில் இறுதியில் ஏற்பட்ட சோக நிகழ்வாக அமைந்து விட்டது.