

நாட்டில் தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான இளைஞர்களின் மிக முக்கிய பிரச்சினையாக நிதி நெருக்கடி உருவெடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்குவதற்கு கூட கடன் வாங்க வேண்டிய சூழலில் தான் இருக்கிறோம். விலைவாசி உயர்வை நமக்கு எடுத்துரைக்க நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையே போதும்.
இந்நிலையில் நிதி நெருக்கடியால் இந்தியாவில் உள்ள 97% இளைஞர்கள் மன அழுத்தத்தில் தவிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சம்பளத்தை விடவும் மாதாந்திர செலவு அதிகமாக இருப்பது தான் நிதி நெருக்கடிக்கு மிக முக்கிய காரணமாகும்.
நிதி நெருக்கடியில் இருந்து இளைஞர்கள் மீண்டு வர சேமிப்பு மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒருமுறை கடன் வாங்கி விட்டால், அதனை அடைப்பதற்குள் பல்வேறு நிதி நெருக்கடிகள் சூழ்ந்து விடுவதால் அதிலிருந்து விடுபட முடியாமல் இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
குடும்ப செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் என திருமணமான ஆண்கள் ஒவ்வொரு மாதத்தைக் கடப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். அதிலும் கடன் வாங்கிவிட்டு மாதத் தவணை செலுத்தி வருபவர்கள் தான் அதிகளவில் நிதி நெருக்கடியில் தவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில் பணம் தான் அனைத்திற்கும் காரணமா என்றால், நிச்சயமாக இல்லை என்பதை பதில். ஏனெனில் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்து, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைத்தால் முடிந்த அளவிற்கு நிதி நெருக்கடியில் இருந்து தப்பித்து விடலாம் என பொருளாதார நிபுணர்கள் அறிவுரைத்துள்ளனர்.
திடீரென ஏற்படும் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழலைத் தவிர்க்க, முன்கூட்டியே முதலீடு செய்வது நல்லது. இன்றைய பொருளாதார உலகில் பெரும்பாலான இளைஞர்கள் முதலீட்டில் அதிக கவனம் செலுத்தினாலும், எப்படி எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் தடுமாறுகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் 97% இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கு நிதி நெருக்கடியும், பொருளாதார அழுத்தமுமே மிக முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சமூகம் மற்றும் உளவியல் குறித்த பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நிலை தான் மனச்சோர்வு எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதி அடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
1. பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு முதலில் இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு, சம்பளத்தை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
2. அடுத்ததாக நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நீண்ட கால முதலீடுகள் உங்களது வருங்காலத்தில் உதவும். ஆனால் திடீரென ஏற்படும் அவசர செலவுகளில் இருந்து உங்களை பாதுகாக்க குறுகிய கால முதலீடுகள் தான் பேருதவியாக இருக்கும்.