

இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC), சென்சார் சான்றிதழை வழங்கி வருகிறது. தணிக்கை வாரியம் சார்பில் ஒரு படத்திற்கு A, U, U/A மற்றும் S என 4 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படும். சட்டம் 1952 மற்றும் 2024 ஆகியவற்றின் படி, தணிக்கை வாரியம் 48 நாட்களுக்குள் ஒரு படத்திற்கு சென்சார் சான்றிதழை வழங்க வேண்டும்.
இந்நிலையில் திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் வழங்கும் சென்சார் சான்றிதழ்களின் அடிப்படையில் ஒரு படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பது நிர்ணயிக்கப்படும். அதாவது ஒரு படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டால், அந்தப் படத்தை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும். U சான்றிதழ் வழங்கப்பட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அந்த படத்தை பார்க்கலாம். U/A சான்றிதழ் வழங்கப்பட்டால், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றோரின் அனுமதியுடன் படத்தை பார்க்கலாம். விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு பார்வையாளர்களுக்கு மட்டுமே S சான்றிதழ் பெற்ற படங்களைப் பார்க்க முடியும்.
கடந்த ஜனவரி 9-ம் தேதி ரிலீசாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இன்று வரை ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தால், தணிக்கை வாரியம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இன்னமும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியத் திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழை வழங்கும் கால அவகாசம் 48 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குறும்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி சென்சார் வேண்டி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து, சான்றிதழ் வழங்கப்படுவது வரை பல்வேறு நிலைகளுக்கு தணிக்கை வாரியம் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தைக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னதாக விண்ணப்பத்தை ஆய்வு செய்ய தணிக்கை வாரியம் 7 நாட்களையும், ஆய்வுக் குழுவை அமைக்க 15 நாட்களையும், சான்றிதழ் வழங்க 5 நாட்களையும் எடுத்துக் கொண்டது. ஆனால் தற்போது சென்சார் சான்றிதழ் வழங்க மொத்தமாகவே 18 நாட்கள் மட்டுமே இருப்பதால், தணிக்கை வாரியம் கடைபிடிக்கும் பல்வேறு நிலைகளின் கால அவகாசமும் குறையும்.
தற்போது சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இருப்பினும் தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் தங்கள் வழக்கை வாபஸ் செய்துவிட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு (RC) சென்றால் தணிக்கை சான்றிதழ் விரைவில் கிடைக்க வழி உள்ளது.