இந்தியாவில் பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியுடன் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் பணிகள் முடிவடைய உள்ளதால், 68,467 வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான, அதாவது 78.09% படிவங்கள் வாக்காளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் படிவங்களை நிரப்புவதற்கு 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் தேவை என்பதால், பொதுமக்கள் இப்படிவங்களை நிரப்புவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் மிக எளிதில் அணுகும் படியாக, ஆன்லைனில் சிறப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தமிழ்நாடு தேர்தல் ஆணையம். அதோடு சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் படிவங்களை ஆன்லைனில் நிரப்புவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது செயலில் இருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்தப் படிவங்களை நிரப்புவதற்கு, வாக்குச்சாவடி அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழிகாட்டுவார்கள். மேலும் முந்தைய தீவிர வாக்காளர் திருத்தம் 2002/2005 இன் வாக்காளர் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள https://www.voters.ecl.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் இந்த இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் ‘Search your name in the last SIR’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, மாநிலத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின்னர் பெயர் மூலம் தேடுதல் அல்லது EPIC எண் மூலம் தேடுதல் ஆகிய இரண்டு விருப்புங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
EPIC எண் மூலம் தேடும் பொழுது, வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணை உள்ளிட்டால், உங்கள் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். பெயர் மூலம் தேடும் பொழுது மாவட்டத்தின் பெயர், சட்டமன்றத் தொகுதியின் பெயர், வாக்காளர் பெயர், தாய்/தந்தை/பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளிட்டு உங்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்தப் படிவங்களை பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம். இதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப் போக வேண்டியது அவசியம். மேலும் வாக்காளர் அட்டையில் மொபைல் எண்ணைப் பதிவு செய்திருந்தால் மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்.
ஆன்லைனில் வாக்காளர் படிவத்தை சமர்ப்பிக்கும் வழிமுறை:
1. வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://voters.eci.gov.in) செல்ல வேண்டும்.
2. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை சமர்ப்பித்து, உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி-யைக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
3. பிறகு ‘Fill Enumeration Form’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. இப்போது வாக்காளர் படிவத்தை நிரப்பத் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும்.
5. விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு, இணையப் பக்கம் e-sign பக்கத்திற்கு மாறும்.
6. ணபின்னர் மீண்டும் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி-யை உள்ளிட்டவுடன், உங்களின் வாக்காளர் படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.