
இன்றைய அசாதாரண சூழலில் காப்பீடு என்பது அனைவருக்குமே தேவையான ஒன்றாகி விட்டது. அதற்கேற்ப சேமிப்பு மற்றும் காப்பீட்டில் பொதுமக்கள் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு துறை சார்ந்த பணியாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையில் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வழக்குரைஞர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பார் கவுன்சில். இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு ஆண்டுக்கு ரூ.999 கட்டணம் செலுத்தினாலே போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பார் கவுன்சில் வழக்குரைஞர்கள் அனைவருக்கும் ‘999’ என்ற விபத்து காப்பீடு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விபத்து காப்பீட்டுத் திட்டத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பார் கவுன்சில் வக்கீல்கள் பலரும் குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது வக்கீல்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஆண்டுக்கு ரூ.999 என்ற குறைந்த கட்டணத்தில் சிறப்பு விபத்து காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பார் கவுன்சில் தலைவரான பி.எஸ்.அமல்ராஜ் மேலும் கூறுகையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வக்கீல்கள் அனைவருக்கும் காப்பீடு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாதாரண சூழ்நிலையில் அவர்களின் பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதோடு நிதி சுமையிலிருந்து அவர்களை பாதுகாக்க பார் கவுன்சில் இத்தகைய சிறப்பு காப்பீடுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நேஷனல் காப்பீட்டு நிறுவனமும், பார் கவுன்சிலும் ஒன்றிணைந்து சிறப்பு விபத்து காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதன்படி வக்கீல்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆண்டுக்கு ரூ.999 கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தின் படி, விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது உடல் உறுப்புகளை இழந்தாலோ வக்கீல்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். மேலும் விபத்தின் போது மருத்துவ செலவுகளுக்கு ரூ.3 லட்சம் காப்பீடு கிடைக்கும். இந்த சிறப்பு விபத்து காப்பீட்டில் சேர்வதற்கு வக்கீல்கள் அனைவரும் பார் கவுன்சில் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அவர் தெரிவித்தார்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே தனிநபர் மற்றும் குடும்ப காப்பீட்டை எடுத்து வரும் நிலையில், காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியம் அதிகளவில் இருப்பது சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தான் ஒவ்வொரு துறை சார்ந்த நிறுவனமும் பணியாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் காப்பீட்டை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது வக்கீல்களுக்கு வழங்கப்படும் காப்பீடானது, அவர்களின் குடும்பத்தின் பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.