
காப்பீடு எடுப்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு காப்பீட்டின் அவசியத்தை பொதுமக்கள் நன்றாக புரிந்து கொண்டனர். அதே நேரத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் காப்பீட்டுத் திட்டங்களில் பிரீமியம் அதிகமாக இருப்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சிரமத்தை அளிக்கும்.
இருப்பினும் பொதுமக்களின் சிரமத்தைப் போக்க மத்திய அரசு சார்பில் ஏற்கனவே சில காப்பீட்டுத் திட்டங்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதுவும் வெறும் 20 ரூபாயில் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆம், கடந்த 2015 ஆம் ஆண்டில் ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY)’ என்ற காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ஆண்டுக்கு பிரீமியமாக ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். ரூ.2 இலட்சம் வரையிலான காப்பீடு கிடைக்கும்.
குறைந்த தொகையில் இப்படியொரு காப்பீட்டு வசதியை மத்திய அரசு அளிக்கிறது என்பதே இங்கு பாதி பேருக்கு தெரியாது. அதனால் தான் PMSBY திட்டத்தில் காப்பீடு எடுத்தவர்களின் எண்ணிக்கை இன்றுவரை குறைவாகவே உள்ளது. மக்கள் மத்தியில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் காப்பீட்டின் பலனைப் பெற 18 முதல் 70 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் இணைவதற்கு வங்கியில் சேமிப்புக் கணக்கு அவசியம் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஓராண்டுக்கு ரூ.20 பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் விபத்துக் காபபீட்டின் பலனைப் பெற முடியும். இதன்படி விபத்தில் மரணம் அல்லது முழு ஊனம் ஏற்பட்டால் ரூ.2 இலட்சம் வரையிலும், பகுதி ஊனத்திற்கு ரூ.1 இலட்சம் வரையிலும் காப்பீடு கிடைக்கும்.
இந்தக் காப்பீட்டுத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் வகையில் செயலில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் மூலம் பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது. காப்பீடு தேவையில்லை என நினைத்தால் ஆட்டோ டெபிட்டை ரத்து செய்து விடலாம்.
நம்மில் பலரும் அடிக்கடி வீண் செலவுகளை செய்வோம். அதில் ஆண்டுக்கு வெறும் 20 ரூபாயை மட்டும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் சேமித்தால், நமக்கு அதிக பலன்கள் கிடைக்கும். பிரீமியம் தொகை மிகவும் குறைவு என்பதால், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு ஏற்ற காப்பீட்டுத் திட்டமாக இத்திட்டம் இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டைத் தொடங்க நினைத்தால் அருகிலுள்ள வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று காப்பீடு எடுக்கலாம்.
விபத்துக் காப்பீட்டை எடுக்க விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் சிறப்பானதாக இருக்கும். அவசர காலங்களில் நம்முடைய குடும்பத் தேவைகளை இந்தக் காப்பீடு பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை.