

உலகின் மிகவும் பிரபலமான சின்னங்களில் ஒன்றான ஈபிள் டவர் விற்பனை செய்யப்பட உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இது கற்பனை போன்று கூட உங்களுக்கு தோன்றலாம் ஆனால், உண்மையாகவே ஈபிள் கோபுரத்தின் 137 ஆண்டுகள் பழமையான ஒரு பகுதி விற்பனைக்கு வருகிறது. ரூ.1 கோடி இருந்தால் நீங்களும் இந்த உலக அதிசயத்தை வாங்கலாம்.
பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபிள் டவர், 1889-ஆம் ஆண்டு உலகக் கண்காட்சிக்காக (World's Fair) பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டை நினைவு கூறும் வகையில், பொறியாளர் குஸ்டாவ் ஈபிள் அவர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. 300 மீட்டர் (தற்போது 330 மீ) உயரமுள்ள இக்கோபுரம், 1887-1889 வரை இரண்டாண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இரும்பு லேட்டிஸ் (lattice) கட்டமைப்பில் அமைந்துள்ள இது, உலகின் மிக உயரமான மனிதனால் கட்டப்பட்ட அமைப்பாகவும், பாரிஸின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது.
முதலில் இந்தக் கோபுரம், வெறும் 20 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருக்கும் நோக்கில் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, இது ஒரு உலகளாவிய கட்டிடக்கலைச் சின்னமாக கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. 1889 முதல் 1930 வரை உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்த இந்த உலக அதிசயம், 1991-ல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இன்று, ஈபிள் டவர் (La tour Eiffel) உலகின் மிக பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் ஈபிள் கோபுரத்தின் அசல் சுழல் படிக்கட்டின் ஒரு பகுதி (Genuine section) வரும் மே 21 அன்று ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, ஈபிள் கோபுரம் முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டான 1889-ஐச் சேர்ந்தது. Artcurial நிறுவனம் ஒருங்கிணைக்கும் இந்த ஏல விற்பனை, இப்போதே உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1889-ஆம் ஆண்டு முதன் முதலில் ஈபிள் டவரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அரிதான அசல் சுருள் படிக்கட்டுகளின் (Spiral staircase)அமைப்பு 2.75 மீட்டர் உயரமும், ரிவெட்டட் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்ட 14 படிகளையும் கொண்டது.
இது ஒரு காலத்தில் கோபுரத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களை இணைத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எத்தனை பேர் இந்தப் படிகளில் ஏறியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்!
1983-ஆம் ஆண்டு ஈபிள் டவரில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான நவீனமயமாக்கல் பணிகளின் போது, புதிய லிஃப்ட்கள் பொருத்தப்பட்டதால் அசல் படிக்கட்டுகளின் சில பகுதிகள் அகற்றப்பட்டன. ஆனால் அதுவும் உலக அதிசயங்களில் ஒன்று என்பதால் அவற்றை வீசி எறிவதற்குப் பதிலாக, 20 பகுதிகள் ஏலம் விடப்பட்டன. சில பகுதிகள் பாரிஸ் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டன, மற்றவை ஏலம் விடப்பட்டு, இப்போது இந்தப் படிக்கட்டின் சில பகுதிகள் ஏற்கனவே 'சுதந்திர தேவி சிலை' (Statue of Liberty) போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இப்போது ஏலத்திற்கு வரும் 8.5 அடி உயரமுள்ள இந்தப் பகுதி, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏலத்தின் 'Lot No. 1' ஆகும். இது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனியார் சேகரிப்பில் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்று ஈபிள் டவரைப் பராமரிக்கும் அதே நிபுணர்களைக் கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிக்கட்டின் மதிப்பு சுமார் €120,000 முதல் €150,000 யூரோக்கள் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.1 முதல் ரூ.1.4 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், முந்தைய ஏலங்களில் ஒரு பகுதி சுமார் ரூ.4.5 கோடி மேல் விற்பனையாகியுள்ளது. பல செல்வந்தர்களுக்கு இதை ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளதால், விலை தாறுமாறாக எகிற வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது.
ஈபிள் கோபுரம் இவ்வளவு நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் வகையில் முதலில் வடிவமைக்கப்படவில்லை. ஆயினும் இன்று, அது காதலின் அடையாளமாகத் கம்பீரமாக நிற்கிறது. இந்த ஏலத்தின் வாயிலாக, ஈடுஇணையற்ற ஒரு நினைவுப் பரிசை உங்கள் இல்லத்திற்கே கொண்டுவரும் அரிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது.