

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க இன்னும் 2 இடங்களே தேவை என்று சூழலில் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் விஜய். தற்போது வரை தவெக 107, காங்கிரஸ் 5, இந்தியன் கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 என தவெக-வின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஆட்சியமைக்க தேவைப்படும் 2 இடங்களைக் கொடுத்து ஆதரவு அளிக்கப் போவது யார் என்று கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் தவெக-விற்கு ஆதரவளிப்பதாக நேற்று தெரிவித்தன.
இருப்பினும் இரு கட்சிகளும் ஆதரவு கடிதத்தை வழங்காததால் ஆதரவளிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே 9) அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டமும், விசிக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டமும் சென்னையில் நடைபெற இருக்கிறது.
அமமுக மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக கையெழுத்திட்ட வீடியோவை தவெக வெளியிட்டுள்ளது. இதன்படி காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தவெக-விற்கு ஒரு முக்கிய நிபந்தனையுடனே ஆதரவளித்தன. அதாவது என்டிஏ கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக கேட்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.
இந்நிலையில் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்ட வீடியோவை தவெக-வினர் வெளியிட்டதால், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் நிபந்தனையை மீறியது அம்பலம் ஆகியுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு, தவெக-விற்கு தொடர்ந்து கிடைக்குமா என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
ஒருவேளை நிபந்தனையை மீறியதாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக-விற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால், மீண்டும் தவெக-வின் பலம் 107 ஆக குறைந்து விடும். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளை நாடுவதைத் தவிர தவெக-விற்கு வேறு வழியே கிடையாது. இல்லையெனில் தமிழகம் அடுதஅத 6 மாதத்தில் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டி இருக்கும். மறு தேர்தலை சந்திக்க தமிழகம் தயாராக இல்லை என ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக எப்போது பொறுப்பேற்பார் என தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கும் சூழலில், ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழகம் போராடிக் கொண்டிருக்கிறது.
அப்படியே ஒருவேளை தனி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தாலும், அந்த ஆட்சியை 5 ஆண்டு காலத்திற்கு நீட்டிக்க முடியுமா என்பதும் விஜய் முன் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.