#JUST IN : அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு - முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்..!

PTR
PTR
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பொது வாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமாக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது 10 ஆண்டுகால பொதுவாழ்வில் திமுகவுக்காகவும், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவாகவும், தமிழ்நாடு அமைச்சராகவும், மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராகவும் தான் செய்த பணிகளை அறிக்கையாக இன்று வெளியிட்டுள்ளார். 

தொடர்ந்து மக்கள் பணியாற்றியதால் சிறிது காலம் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளதாகவும், சமீபத்தில் 60 வயதை எட்டியுள்ளதால் தனது வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் தோற்ற நிலையில் பொதுவாழ்வில் இருந்து சிறிது காலம் ஓய்வு என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளாக எனது குழுவுடன் நேரம் பாராமல் உழைத்தது எனது பொறுப்பாகும். தற்போது தனிப்பட்ட குடிமகனாக எனது நேரம் மற்றும் கால அட்டவணை முழுவதும் நானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன், சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

முன்னதாக நேரமின்மை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று உரையாற்றுவதற்கான பல வாய்ப்புகளை மறுத்தேன். தற்போது அது போன்ற அழைப்புகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.

அமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்குச் சென்று உரையாற்றவோ அல்லது நிகழ்வுகளில் பங்கேற்கவோ வந்த அழைப்புகளை ஏற்றுக் கொண்டு பயணிக்க, பல சமயங்களில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஓய்வு காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று உரையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஒரு பதிப்பகத்துடன் இணைந்து நான் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ள புத்தகத்தின் பணிகளில் திட்டமிட்ட காலத்தை விட பின்தங்கியுள்ளேன். எனவே இந்த நேரத்தில் அப்புத்தகத்தை எழுதுவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ள உள்ளேன். மேலும் சமீபத்தில் தான் எனக்கு 60 வயது நிறைவடைந்தது என்பதால், எனது உடல்நலத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ஒரு சீரான கால அட்டவணை மற்றும் சிறந்த வாழ்க்கை முறையின் மீது கவனம் செலுத்தவும் நான் விரும்புகிறேன்.

வரும் சில வாரங்களில், எனது பத்தாண்டு காலப் பொது வாழ்க்கையில் நான் முன்னெடுத்த மிக முக்கிய முன்னெடுப்புகள், நிகழ்வுகள் மற்றும் சாதனைகளை எனது குழுவினர் தொகுத்து வெளியிடுவார்கள். இதன் மூலம் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை என்னால் ஏற்படுத்த முடிந்தது என்பதை நினைவு கூற நான் விரும்புகிறேன்.

மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்கள் தொடங்கி, இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த எனக்குத் துணை நின்ற அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அடுத்த தேர்தல் வரும் வரையிலாவது, இனிவரும் காலங்களில் நான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருக்கப் போவதில்லை என்ற எதார்த்தத்தை நான் இப்போது  உள்வாங்கிக் கொண்டு வருகிறேன். இருப்பினும் பொது சேவையிலும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் எனக்குள்ள ஆர்வம் சிறிதும் குறையாமல் அப்படியே உள்ளது. புத்துணர்ச்சியுடனும், புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் நான் மீண்டும் வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
பீகாரின் கயாவில் 1200 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட புத்த மடாலய எச்சங்கள் கண்டுபிடிப்பு!
PTR
logo
Kalki Online
kalkionline.com