
விக்டர் கார்சியா என்பவர் கலிபோர்னியாவை சேர்ந்த டெலிவரி டிரைவர். பிப்ரவரி 8, 2020 ஆம் ஆண்டு , ஸ்டார்பக்ஸ் காபி ஷாப்பில் மூன்று சூடான பானங்களை வாங்க கவுண்டரில் நின்றுள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட காபி கோப்பை சரியாக மூடப்படாமல் வழங்கப்பட்டுள்ளது. அதை கார்சியா பெற்ற போது தடுமாறி, கொதிக்கும் காபி அவரது இடுப்புப் பகுதியில் கொட்டியது. கொதிக்கும் காபி ஊற்றியதால் இடையிலும் தொடையிலும் கடுமையான தீக்காயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மூன்றாம் நிலை தீக்காயங்கள், நரம்பு சேதம் மற்றும் சிதைவு ஆகியவை ஏற்பட்டன. கார்சியாவுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதால் அவை நிரந்தர வடுக்களாக மாறின. இதனால் அவருக்கு சரும ஒட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட கார்சியா, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் அலட்சியத்தைக் காட்டியதாகக் கூறி, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நடுவர் மன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
கார்சியாவின் வழக்கறிஞர் மைக்கேல் பார்க்கர், தனது கட்சிக்காரருக்கு மூன்று பானங்கள் அடங்கிய கேரியர் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒன்று பாதுகாப்பாக மூடப்படவில்லை என்றும் நடுவர் மன்றத்தில் விளக்கினார். இதன் காரணமாக சூடான காபி மேலே கொட்டி கடுமையான தீக்காயங்களை கார்சியாவுக்கு ஏற்படுத்தியது பற்றியும், அந்த காயத்தினால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும், அவரது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாகவும் வாதிட்டார்.
விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை நடுவர் ஆராய்ந்ததில், ஊழியர்கள் வாடிக்கையாளரின் பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அலட்சியமாக செயல்பட்டதை கண்டறிந்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நடுவர் மன்றம் பாதிக்கப்பட்ட கார்சியாவுக்கு $50 மில்லியன் (435 கோடி) நஷ்ட இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
கார்சியாவின் வழக்கறிஞர் குழுவில் ஒருவரான நிக் ரோவ்லி கூறுகையில், "இந்தத் தீர்ப்பு ஸ்டார்பக்ஸின் அலட்சியத்தை காட்டியுள்ளது. எதிர் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, எச்சரிக்கையாக இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்" என்றும் கூறினார்.
ஸ்டார்பக்ஸின் எதிர்வினை:
நடுவர் மன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து ஸ்டார்பக்ஸ் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறினர். மேலும் "கார்சியா பாதிக்கப்பட்டதற்கு நாங்கள் கவலை தெரிவிக்கிறோம். ஆனால், இந்த சம்பவத்திற்கு நாங்கள் மட்டும்தான் காரணம் என்ற நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உடன்படவில்லை. மேலும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள இழப்பீடுகள் மிக அதிகமாக உள்ளது. மேலும் சூடான பானங்களைக் கையாள்வதில், எங்கள் கடைகளில் மிக உயர்ந்த பாதுகாப்பு தருவதற்கு நாங்கள் எப்போதும் உறுதி கொண்டுள்ளோம்" என்றும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த வழக்கு நுகர்வோர் பாதுகாப்பை இலகுவாக எடுத்துக் கொள்ளும் நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். இந்த முடிவை ஸ்டார்பக்ஸ் மேல்முறையீடு செய்த போதிலும், இந்த சம்பவம் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது மற்றும் மோசமான வாடிக்கையாளர் சேவை குறித்து ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது