

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரும் காலங்களில் படிப்படியாக லிட்டருக்கு 28 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடும் என்று கோடாக் நிறுவனம் கணித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி இன்று வரை முடிவுக்கு வராத சூழலில் உள்ளது. இந்நிலையில் போர் தொடங்கிய நாள் முதலே உலக நாடுகள் பலவற்றில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது. இதனால் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) தினமும் சுமார் ரூ. 1,000 முதல் 1,200 கோடி வரையும், மாதத்திற்கு சுமார் ரூ.30,000 கோடி நிதி இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் மத்திய கிழக்கு போருக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70 அமெரிக்க டாலரிலிருந்து 126 அமெரிக்க டாலராக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
இருப்பினும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை ரூ.3.14 மற்றும் டீசல் விலை ரூ.3.11 உயர்ந்துள்ளது.
அதே சமயம், ஆட்டோ மற்றும் கார்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலையும் கிலோவுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு 2 ரூபாய் அதிகரித்து 91 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வரும் நாட்களில் எரிபொருள் விலைகள் மேலும் உயரக்கூடும் என்ற ஊகங்கள் தற்போது எழுந்துள்ளன.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட, தரகு நிறுவனமான 'கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ்' (Kotak Institutional Equities)-இன் அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மாதந்தோறும் சுமார் ரூ.30,000 கோடி அளவிலான கூடுதல் சுமையைச் சுமக்க நேரிட்டது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் ஏறக்குறைய 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. கடந்த சில மாதங்களாக, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்கள் மற்றும் 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) சார்ந்த விநியோகக் கவலைகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
கடந்த மாதம் வெளியான கோடக் அறிக்கையின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரும் காலங்களில் படிப்படியாக லிட்டருக்கு 25-28 ரூபாய் வரை உயர வேண்டியிருக்கும். ஆனால் தற்போது, 3 ரூபாய் விலை உயர்வு, ஒட்டுமொத்த விலை உயர்வுகளின் முதல் கட்டம் என்று கூறியுள்ளது.
உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகளால் ஏற்படும் அழுத்தத்தை இந்த 3 ரூபாய் விலை உயர்வு ஓரளவு மட்டுமே ஈடுசெய்கிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்தால், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மீதான அழுத்தம் குறையக்கூடும்.
அவ்வாறான நிலையில், பெட்ரோல், டீசல் கூடுதல் விலை உயர்வுகளைத் தவிர்க்கலாம். ஆனால், கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே நீடித்தாலோ அல்லது விநியோகத் தடைகள் மோசமடைந்தாலோ, எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் நீண்ட காலத்திற்கு நஷ்டங்களைத் தாங்கிக்கொள்ளும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதில் இருந்து மீண்டு வருவதற்கும், இழப்பை சமாளிப்பதற்கும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக லிட்டருக்கு 28 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கோடாக் நிறுவனம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதுடன் அதன் தாக்கம் நேரடியாக பொதுமக்களை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here