மிகவும் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை காண இலங்கை வாசிகளுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
வருடந்தோறும் பூமி மீது விண்கற்கள் சிறிய அளவில் விழும். இதனை ஜெமினிட் விண்கல் மழை என்று அழைப்பார்கள். அவ்வளவு அழகாக இருக்கும் இந்த நிகழ்வை காண மக்கள் மிகவும் ஆசைக் கொள்வார்கள்.
மேலும் மற்ற விண்கற்கள் விழுவது வெள்ளையாக தெரியும். இந்த விண்கற்கள் சிவப்பு, பச்சை நிறத்திலும் தெரியும். இதுபோன்ற விண்கற்கள் வால்நட்சத்திரங்களிலிருந்துதான் பூமிக்கு வருகிறது. அதாவது, வால் நட்சத்திரங்கள் சென்ற பாதையில் அது விட்டுச் சென்ற தூசி துகள்கள் இருக்கும். விண்வெளியில் காற்று இல்லாததால் இந்த துகள்கள் எங்கேயும் போகாது. இந்நிலையில் பூமி இந்த துகள்கள் இருக்கும் பாதை அருகே போகும்போது அந்த துகள்கள் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு விண்கல் மழையாக பூமியில் விழும்.
ஆனால், சமீபத்தில் எந்த ஒரு வால் நட்சத்திரமும் பூமியின் சுற்றுப்பாதையில் கடக்கவில்லை. பிறகு எப்படி இது நடக்கிறது?
3200 பைத்தன் விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடக்கும்போது சில துகள்களை விட்டுச் சென்றிருக்கிறது. அப்படி உள்ள இந்த துகள்கள் நவம்பர் 19ம் தேதியிலிருந்து டிசம்பர் 24ம் தேதிவரை பூமியில் விழும்.
அந்தவகையில் ஜெமினிட் விண்கல் மழையை இலங்கையில் இன்றும் நாளையும் இரவு நேரத்தில் வானில் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் இந்த விண்கற்கள் பொழிவு தென்படும் என்றும் ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இந்த ஆண்டின் மிகவும் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை உச்சத்தை அடையும்போது ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும்.
இதனை தொலை நோக்கிகள் மூலம் காணலாம். ஆனால், மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில் தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணிலேயே பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.