
கடந்த சில ஆண்டுகளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனைக் குறைக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வட இந்தியாவில் அதிகரித்து வந்த காற்று மாசுபாடு தற்போது தென்னிந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளன.
காற்றில் உள்ள நச்சுகள் மிக எளிதாக மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த ஆய்வு முடிவுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க பழைய வாகனங்களுக்குத் தடை விதித்தல், இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துதல், எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கும் நேரத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மாநில அரசு. இருப்பினும் காற்றின் தரம் குறைந்து கொண்டே வருவதால் அவ்வப்போது பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வட மாநிலங்களில் இருந்து நச்சுக் காற்று பல கிலோமீட்டர் தொலைவு கடந்து தென் மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரளா கல்லூரி உதவிப் பேராசிரியரான டாக்டர் சலீம் அலி, சென்னை ஐஐடி மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து காற்றின் தரம் குறித்து கடந்து 3 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தார்.
இந்த ஆய்வுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியரான சஞ்சய் குமார் மேத்தா மற்றும் சென்னை ஐஐடி பேராசிரியரான சந்தன் சாரங்கி ஆகியோர் தலைமை தாங்கினர். தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வளிமண்டல வேதியியல் மற்றும் இயற்பியல் இதழில் வெளியாகியுள்ளது.
பூமியின் மேற்பரப்பில் தூசி மற்றும் துகள்கள் நிறைந்தால், அது வெப்பநிலையை உயர்த்தி விடும். தற்போது பூமி மேற்பரப்பில் 1கிமீ முதல் 3கிமீ வரை தூசி மற்றும் துகள்கள் நிறைந்திருப்பதால், கிட்டத்தட்ட 2 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால் காற்றில் 60% வரை மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் இனி வரும் காலங்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை சந்திக்க நேரிடும் என இந்த ஆய்வு முடிவு எச்சரித்துள்ளன.
கேராளாவில் இதுகுறித்த தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என டாக்டர் சலீம் அலி தெரிவித்துள்ளார். காற்று மாசுபாட்டைக் குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் அடுத்த சில ஆண்டுகளில் காற்றின் தரம் வெகுவாக குறைந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.