ஆபத்தாக மாறும் பருவநிலை மாற்றம்: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!
கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் அனைத்தும் பருவநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளை அனுபவித்து வருகின்றன. இதனைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றாக இணைந்து துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் இதன் பாதிப்பு வரப்போகும் ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரிக்கும் என ஆய்வு முடிகள் எச்சரிக்கின்றன. மேலும் பருவநிலை மாற்றத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தடுத்தாக வேண்டும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
பருவநிலை மாற்றம் இன்று உலகளவில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதன் காரணமாக அதீத வெப்பம், கடல் மட்டம் உயர்வு மற்றும் பருவம் தவறிய மழை போன்ற பல பாதிப்புகளால் உலக நாடுகள் பல விளைவுகளை சந்தித்து வருகின்றன. பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், தடுக்கவும் கடந்த 1992 இல் ஐநா பருவநிலை மாற்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது உறுப்பினர்களாக உள்ள 197 நாடுகளும், 2015 பாரீஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
பாரீஸ் ஒப்பந்தத்தின் படி, மனித செயல்பாடுகளின் மூலம் உலகளவிலான வெப்பநிலை ஓராண்டுக்கு 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டக் கூடாது. இதற்கேற்ப உலக நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்படி காற்று மாசால் உருவாகும் கார்பன் வெளியேற்றத்தை உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியமாகும். இதற்காக கார்பன் பட்ஜெட் அளவீடு ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990 முதல் 2100 வரையிலான காலகட்டத்தில் 1600 ஜிகா டன் கார்பனை மட்டுமே வெளியிட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிர்ணயித்த அளவில் 50% அளவை முதல் 30 ஆண்டுகளிலேயே உலக நாடுகள் பயன்படுத்தி விட்டன. இதே நிலை தொடரும் பட்சத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இல்லையெனில் கார்பன் அளவு அதிகமாகி, பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் படுமோசமான விளைவுகளைக் கொடுத்து விடும் என ‘உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் குறியீடுகள்' என்ற ஆய்வு முடிவு எச்சரிக்கிறது.
பசுமை இல்ல வாயுக்களை பாதிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் உலகளவில் அதிகரித்து வருகிறது. மேலும் வளிமண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்களின் அடர்த்தியும் அதிகரித்துள்ளது. இதனால் கார்பன் பட்ஜெட்டும் அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்களுக்கென தனித்திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகள் பலவும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
பிரேசில் நாட்டில் வருகின்ற நவம்பர் மாதத்தில் 30வது சர்வதேச பருவநிலை மாநாடு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே உலக நாடுகள் பருவநிலை மாற்றம் தொடர்பான திட்ட அறிக்கையை கடந்த பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 197 நாடுகளில் 25 நாடுகள் மட்டுமே இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பித்தன.
இதிலிருந்து உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.