துருக்கியில் சொகுசு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயற்கை பேரிடர் ஒருபுறம் மக்களை காவு வாங்குகிறது. மறுபுறம் தீ விபத்து, விமான விபத்து போன்றவை மக்களை அச்சப்படுதுகிறது. சமீபக்காலமாக அதிகமாக இந்த விபத்து செய்திகள் வருகின்றன. இதற்கு மனித கவன குறைவு உட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இப்படித்தான் ஒரு வாரமாக காலிஃபோர்னியா காட்டுத் தீ ஒரு ஊரையே அச்சத்திற்கு உள்ளாக்கியது. மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிரபலங்களின் வீடுகள் கூட தீக்கு இரையாகின.
இப்படியான நிலையில், துருக்கியில் சொகுசு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் கர்தல்காயா சொகுசு விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதி சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் பகுதியாக உள்ளது. தற்போது துருக்கியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு இருக்கின்றனர். கிராண்ட் கார்தால் சொகுசு விடுதியில் ஏராளமான மக்கள் விடுமுறை காரணமாக தங்கள் குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளனர். 12 மாடி கட்டிடத்தில் 230க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இப்படியான நிலையில், அந்த சொகுசு விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜனவரி 21ஆம் தேதி அந்த நட்சத்திர ஓட்டலில் சமையலறையில் அதிகாலை 3:30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தீ அதிவேகமாக பரவியதன் காரணமாக உள்ளிருந்தவர்கள் கண்ணாடியை உடைத்து வெளியே வர ஆரம்பித்தனர். ஜன்னல் வழியாக கீழே குதித்ததில் சிலர் உயிரிழந்தனர்.
சொகுசு விடுதி முழுவதும் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்டதால், தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்பதிலும் சிக்கல் நிலவியது. வெகு நேரம் போராடிய மீட்புக்குழுவினர், உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் 76 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.